திருவள்ளூர்: பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடம் வேண்டாம் என சீமானுக்கு வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சும்மா பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடம் வேண்டாம், சீமானிடம் இருக்கும் கூட்டத்தை விட என்னிடம் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது என திருவள்ளூரில் வீரலட்சுமி பேட்டியளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
மேலும் சீமானை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சுமூகமாக முடிந்தால் அன்னதானம் செய்யப்போவதாக வீரலட்சுமி வேண்டியதாகவும், அதனை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி வருகை தந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன்னு சொன்னீங்களே.. என கூறியவாறு ஸ்கெட்ச் பேனாவை கையில் கொடுத்து களாய்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் வீரராகவர் கோயிலில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து திருவள்ளூரில் வீரலட்சுமி அளித்த பெட்டியில்; “சும்மா பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடம் வேண்டாம், சீமானிடம் இருக்கும் கூட்டத்தை விட என்னிடம் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது, என்னிடம் இருக்கும் கூட்டத்தை இறக்கிவிட்டால் அவ்வளவுதான், விஜயலட்சுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு சீமான் சமாதானம் செய்துள்ளார், சீமானும் விஜயலட்சுமியும் என் மீது எந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன், என்னுடைய நகைகளை அடகு வைத்து விஜயலட்சுமியை பாதுகாத்து வந்தேன், விஜயலட்சுமி விவகாரத்தில் தோற்றுவிட்டதால்தான் செட்டில்மென்ட் பேசியுள்ளார் சீமான், தான் செய்த தவறுக்கு வருந்தியே விஜயலட்சுமிக்கு போன் செய்து சீமான் சமாதானப்படுத்தி உள்ளார்” என திருவள்ளூரில் வீரலட்சுமி பேட்டியளித்தார்.