திருச்சி: சீமான் மீது டிஐஜி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்று உள்ளது. இந்த வழக்கில் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தது குறித்து, திருச்சி ஜேஎம்-4 கோர்ட்டில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சீமான் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இவ்வழக்கு மாஜிஸ்திரேட் விஜயா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்கும் வகையிலேயே சீமான் வருண்குமார் குறித்து பேசினார். அங்கு பேசியதற்கு திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. எனவே, வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பு வக்கீல் வாதிட்டார். இதை கேட்டுக் கொண்ட நீதிபதி விஜயா, ஜூன் 4ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு மத்தியில் நேற்று இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயா, இவ்வழக்கில் சீமான் அவதூறாக பேசியதற்கு முதல் நிலை நோக்கு இருக்கிறது. எனவே வழக்கு விசாரணைக்கு உகந்ததே. வரும் ஜூலை 7ம் தேதி சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து சீமானுக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் சம்மனை சீமான் பெறத்தவறினாலோ அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தாலோ அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என வக்கீல்கள் தெரிவித்தனர்.