சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், இந்த புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் வேண்டாம் என தெரிவித்துவிட்டு சென்றார். கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இதன்படி, வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, வரும் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சீமானுக்கு எதிராக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமியும் கடந்த இரண்டு தினங்களூக்கு முன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தனது வக்கீல்களுடன் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.
பின்னர் நடிகை விஜயலட்சுமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் என்னை போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். சிலநாட்களாக வீரலட்சுமி ஒரு வழிப்பாதையில் செல்கிறார். என்னை ஒரு வழியில் எடுத்து செல்கிறார். நேற்று முன்தினம் இரவு முதல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியில் போக வைத்துவிட்டார். உணவையும் நிறுத்திவிட்டார். சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான கொடுமைகள் நடந்தது. சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூரூ செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன். வழக்கை தொடர்வது, சென்னைக்கு வருவது இனி இல்லை. இவ்வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார்.
2 வாரமாக வீட்டு காவலில் இருந்ததுபோல் இருந்தேன். செல்போன்கூட இல்லை. சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு செல்கிறேன். சீமான் புல் பவராக உள்ளார். சீமான் எப்போதும் நன்றாக இருக்கட்டும். எப்போதும் வெற்றியோடு இருக்கட்டும். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது. நான் சீமானிடம் காசு வாங்கவில்லை. சீமானின் குரல்தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டுவர முடியவில்லை. அவர் பவராக உள்ளார்.