சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி 28ம் தேதி ஈரோடு அசோகபுரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார்களின் அடிப்படையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கினர். ஆனால், சீமான் ஆஜராகவில்லை.
இந்நிலையில், மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்குவதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன் தினம் நீலாங்கரை வந்தனர். சீமான், தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இரவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், சீமானுக்கு சம்மன் வழங்க நேற்று 2வது நாளாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சென்னை நீலாங்கரைக்கு சென்றனர். இன்று அல்லது நாளை சம்மன் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.