Tuesday, March 5, 2024
Home » சீலமிகு சிவநெறி

சீலமிகு சிவநெறி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவவழிபாடு நிறைந்த பூமியாக விளங்கும் இந்தியத் திருநாட்டில், இமயம் முதல் சேது வரை எண்ணிலா திருக்கோயில்கள் உள்ளன. பல்வேறு இன, மொழி,மாநில மக்களால் ஒரே வகை நெறியில் அவை போற்றப் பெறுகின்றன. அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சூத்திரக்கயிறு ‘‘சிவம்’’ எனும் திருநாமமே. நம் தமிழ்நாட்டில் சைவ நெறி நின்று ஒழுகிய பெரியவர்களை அறுபத்து மூன்று நாயன்மாராகப் போற்றுகின்றோம். திருநீலகண்ட குயவரில் தொடங்கி திருநீலகண்ட யாழ்ப்பாணரில் முடியும் இவர்களின் எண்ணிக்கை அறுபத்து மூன்றாக இருப்பதால் இவர்களை அறுபாண் மூவர் என்பர் ஆன்றோர். இவர்களைத் தவிர, ஒன்பது திருக்கூட்டத்தாரை அவர்கள் தொகையடியார்கள் எனப் பகுத்தும் நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், பொய்யடிமையில்லாத புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர், பக்தராய் பணிவார்கள், பரமனை மட்டுமே பாடி நிற்பவர்கள், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள் (பிறந்தவைகள்), முப்போதும் திருமேனி தீண்டுபவர்கள் (ஆதிசைவர்கள்), முழுநீறு பூசிய முனிவர்கள், அப்பாலும் அடிச்சார்ந்தவர்கள் என இவர்கள் எண்ணிக்கையில் அடங்காதவர் ஆவர். திருவாரூரில் மட்டும் மனிதர்களைத் தவிர அங்கு பிறக்கும் விலங்குகள் பறவைகள் என அனைத்துயிரும் சிவகணத்தவர்தாம்.

அறுபத்து மூன்று நாயன்மாரில் ஆதிசைவர் நால்வர், வேதியர் பன்னிருவர், மாமாத்திரர் ஒருவர், முடிவேந்தர் அறுவர், குறுநில மன்னர் ஐவர், வணிகர் ஐவர், வேளாளர் பதின்மூவர், இடையர் இருவர், குயவர் ஒருவர், பாணர் ஒருவர், மீனவர் ஒருவர், வேடர் ஒருவர், சான்றார் ஒருவர், சாலியர் ஒருவர், செக்கு வைத்து எண்ணெய் தொழில் புரிந்த செக்கார் ஒருவர், துணி வெளுக்கும் ஈரங்கொல்லியார் (ஏகாலி) ஒருவர், புலையர் ஒருவர், மரபு அறிய இயலாதவர்கள் அறுவர் எனப் பலரும் இருந்துள்ளனர். திருக்கூட்டத்தாரில் தில்லைவாழ் அந்தணர் தவிர மற்ற எட்டு கூட்டத்தாரும் அனைத்து சாதிகளுக்குரியவர் ஆவர்.

இவர்கள் அனைவருக்கும் படிமம் கல்லிலும் செம்பிலும் வடித்து, திருக்கோயில்தோறும் பரம பவித்திரமான முதல் திருச்சுற்றில் வரிசையாகப் பிரதிட்டை செய்து நாளும் மூலத்தானத்திற்கு பூசை புரியும் சிவாச்சாரியாரே அப்பூசையோடு இவர்களுக்கும் பூசைசெய்து அவர்களை வழிபடு தெய்வமாக்கியதுதான் சைவநெறியாகும்.

மேலும், பெருந்திருவிழாக்களில் அறுபத்து மூவர் உற்சவம் கொண்டாடி அவர்கள் திருமேனிகளை வீதி உலா எடுத்து வருவதும்தான் அந்நெறியின் சிறப்பு அம்சமாகும். நந்தமிழ்நாட்டு மண்ணிலன்றி இவ்வரிய மரபினை வேறு எங்கும் நாம் காண முடியாது. அதுதான் தமிழ்ச் சைவம். திருநீலகண்டர் என்பார், பாணர் மரபில் உதித்தவர். யாழ் வாசிப்பதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்ற அவர் ஈசனின் புகழினை யாழிலிட்டு வாசிப்பதில் வல்லவர். திரு எருக்கத்தம்புலியூர் என்னும் சோழநாட்டு ஊரில் பிறந்த அவர், மதுரை ஆலவாய்ப் பெருமான் கோயிலுக்குச் சென்றார். கோயிலினுட் சென்று வழிபட இயலாத நிலையால், கோயில் வாசலில் இருந்தவாறே பெருமானின் புகழினை யாழில் வாசித்தார்.

அவர் வாசிப்பினைக் கேட்டு மகிழ்ந்த ஆலவாய்ப் பெருமான், அன்று இரவே அன்பர்கள் கனவில் தோன்றி தன்முன்பு அவரை அழைத்துவரப் பணித்தார். அதன்படியே சைவ அன்பர்கள் அவரை மறுநாள் கோயில் கருவறை முன்பு அழைத்துச் சென்றனர். ஈசனின் அருட்திறத்தால் கூடல்பெருமானின் முன்பு பாடி யாழ் வாசித்தார். அப்போது தரையில் வைத்து யாழினை வாசித்ததால், அந்த யாழின் ஓசை வேறுபடும் என சுந்தரப் பலகை ஒன்றை இடபெருமான் திருவுளங்கொண்டதால் அறிந்த அன்பர்கள் தமணிய பலகையை அங்கு இட அதன்மேல் யாழினை வைத்தவண்ணம் வாசித்து பெருமானின் புகழினைப் பாடினார்.

மதுரையினின்று புறப்பட்ட பாணனார், பல தலங்களை வணங்கி திருவாரூரினை சென்றடைந்தார். ஆரூர் கோயிலினை அடைந்த பாணனார் தன் குலப்பிறப்பு எனக் கருதி வாயிலில் இருந்தவாறே பெருமானின் புகழினைப் பாடி வாசித்தார். இதுகண்ட ஆரூர் ஈசன் எல்லோரும் வரும் வாயிலினைவிட தனித்துவம் பெற்ற பவித்திரமான வாசல் ஒன்றினை வடதிசையில் தோற்றுவித்து அவ்வாயில் வழியே அவரை மூலத்தானத்து வாயிலுக்கே வரச்செய்து தன்னை வணங்குமாறு செய்தார். இதனை சேக்கிழார்பெருமான், ‘‘மூலத்தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்தனை வணங்கிச் சாலக்காலம் அங்கிருந்து…’’ என்று குறிப்பிடுவார்.

சமூகம் ஒருவரைத் தாழ்ந்த குலப்பிறப்பு எனக் கருதி ஒதுக்கினாலும், பரமேஸ்வரன் எவரையும் ஒதுக்கமாட்டான் என்பதை நீலகண்ட யாழ்ப்பாணரின் வாழ்வில் நடந்த பின்னை நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. சோழநாட்டில், திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை) எனும் ஓர் ஊர் உண்டு. அங்கு சிவமறையவர் குலத்தில் பிறந்தவர்தான் திருநீலநக்கர் என்பவர். வேத நெறியும் ஆகம வழியும் பிறழாத நித்ய பூசைகள் செய்யும் அவர், தம் இல்லத்தில் ஆகவணீயம், தட்சிணாக்கினி, காருதபத்யம் எனும் மூன்று தீக்குண்டங்களையும் அமைத்து நாளும் வேள்வி புரியும் தகைமையவர். ஓர் ஆதிரை நாளில் தன் இல்ல பூசைகளை முடித்துக் கொண்டு தன் துணைவியாருடன் அவ்வூர் சிவாலயமான அயவந்தியில் பூசை செய்வதற்காகச் சென்றார். துணைவியார் உதவிகள் புரிய அயவந்தை பெருமானுக்குரிய நியமம் குன்றாத பூசைகளைச் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது, ஒரு சிலந்தி லிங்கத்தின்மேல் ஊர்ந்து செல்வதை அவர் துணைவியார் கண்டார். குழந்தை மீது சிலந்தி ஊர்ந்தால், தாய் எவ்வாறு பதறிப்போய் வாயால் ஊதுவார்களோ அதே உணர்வை அவ்வம்மையார் அடைந்தார். பதறிப்போய் தன் வாயால் லிங்கத்தின் மீது ஊதி சிலந்தியைப் போக்கினார். அதுவரையில் பூசையில் மூழ்கியிருந்த நீலநக்கர், தான் பரம பவித்திரமாகப் பூசிக்கும் இறைத் திருமேனியின் மீது தன் மனைவி எச்சிலினை உமிழ்ந்துவிட்டார் எனக் கோபம் கொண்டார். அனுசிதம் எனக் கூறியவாறு தனது பூசைகளை முடித்ததோடு, இனி நீ என் மனைவியல்ல எனக் கோபத்துடன் கூறியவாறே அவ்வம்மையாரை அங்கேயே விட்டுவிட்டு தன் இல்லம் சேர்ந்தார்.

அவ்வம்மையாரும் அவரது உறுதியும் கோபமும் அறிந்த நிலையில் இரவு முழுவதும் கோயிலிலேயே இருந்தார். இரவு படுக்கையில் உறங்கிய நீலநக்கர் கனவில் தோன்றிய பெருமான், தன் உடலைக் காட்டி என் உடல் முழுவதும் சிலந்திக் கொப்பளங்கள் இருப்பதையும், உன் மனைவி எச்சிலுடன் ஊதிய இடத்தில் அக்கொப்பளங்கள் இல்லை என்று கூறி சிலந்திக் கொப்பளங்களைக் காட்டினார். பதறி எழுந்த நீலநக்கர் தன் பூசையோ, பவித்திரமான தன் செயல்களோ இறைவனுக்கு உவப்பு அளிக்கவில்லை என்பதையும், தன் மனைவியின் தாயுள்ளத்து அன்பு மட்டுமே ஈசனுக்கு நிறைவினை அளித்தது என்பதை உணர்ந்தார். சித்தம் தெளிந்தவராய் புலர்காலை வந்ததும் கோயிலுக்குச் சென்று ஈசனை வீழ்ந்து வணங்கி தனிமையில் இருந்த தன் மனைவியாரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிகழ்வு ஒருபுறம் நிகழ்ந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் தன் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் சீகாழிப் பதியை அடைந்து திருஞானசம்பந்தராகிய குழந்தையைக் காணச் சென்றனர். தம்பதியர் இருவரையும் கண்ட சம்பந்தர், ஐயரே! எனப் பாணனாரை விளித்துப் பாடி யாழ் வாசிக்கக் கேட்டுக் கொண்டார். அவர்தம் மிடற்றிசையிலும், யாழ் இசையிலும் லயித்த சம்பந்தர் தன்னுடன் என்றும் பிரியாது இருந்து தம்பதிகளுக்கு யாழ் வாசிக்கப் பணித்தார். அன்று அவரோடு ஒன்றிய அத்தம்பதியர் நல்லூர் பெருமணத்தில் சிவஜோதியில் கலக்கும் வரை சம்பந்தருடனேயே என்றும் பிரியாது இருந்தனர். இவர்களே தமிழ்நாட்டு முதல் ஓதுவாமூர்த்திகள் என்றால் மிகையன்று.

திருநீலகண்ட பாணனார், மதங்கசூளாமணியார் ஆகியோருடன் திருச்சாத்தமங்கைக்கு திருஞானசம்பந்தர் வந்தபோது திருநீலநக்கர் எதிர்கொண்டழைத்து தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அமுது செய்வித்தார். மீண்டும் இரவு அமுது உண்டபின் சம்பந்தர் நக்கரை நோக்கி தன்னுடன் வந்துள்ள பாணனார் தம்பதியராய் இருப்பதால் அவர்கள் தங்கும் வகையில் ஏற்ற இடம் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். உடன் திருநீலநக்கர் என்ற அந்த மறையவர் தன் வீட்டு நடுமனையில், தான் நாளும் முத்தீ வளர்க்கும் வேதிகைகள் உள்ள பரம பவித்திரமான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கு அவர்களைத் தங்க வேண்டினார். அவர்கள் இருவரும் அங்கு தங்க வந்தபோது அத்தீக்குண்டங்களில் இருந்த செந்தீவலம் சுழித்து எரிந்ததாம். இதனை சேக்கிழார் பெருமான் திருநீலநக்கர் புராணத்தில்,

`நின்ற அன்பரை நீலகண்ட பெரும்பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடங்கொடுத்தருள்வீர் என்ன
நன்றும் இன்புற்று நடுமனை வேதியின்
பங்கர்ச்
சென்று மற்றவர்க் கிடம் கொடுத்தனர்
திருமறையோர் (30)

அங்கு வேதியில் அறாத செந்தீ வலஞ்சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித் தன்றியே ஒளிரத்
தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியாருடன் அருளாற் பள்ளி கொண்டார் (31)
– என்று குறிப்பிட்டுள்ளார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர் என்ற இருவரில் முதலாமவர் தாழ்குலத்து பாணர். மற்றவர் உயர்குலத்து மறையவர். இவர்கள் இருவரையும் இணைத்தவர் அந்தணர் குலத்து ஞானக் குழந்தையார். இவர்கள் வரலாறுதான் சாதிகள் கடந்த உண்மையான சிவநெறியாகும். மொழிகள் கடந்த நிலையும் சிவநெறியின் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஒன்பது திருக்கூட்டத்தாரில் ஒரு கூட்டத்தினரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், ‘‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பற்றிய சிற்பக்காட்சி ஒன்று தாராசுரம் சிவாலயத்தில் உள்ளது. அதில் இடபம் முன்னே கிடக்க ஒரு கோயில் காணப்பெறுகின்றது. அதன் முன்பு அமர்ந்த நிலையில் மூவர் தாளமிசைத்துப் பாடியவாறு உள்ளனர். பரமனையே பாடுவார் பற்றி சேக்கிழார்பெருமான் பெரியபுராணத்தில்,

`தென்தமிழும் வடகலையும் தேசிகமும்
பேசுவன
மன்றிடை நடம்புரியும் வள்ளலேயே
பொருளாக
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணா பரமனையே பாடுவார்’

– என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலின் பொருளாவது, தமிழ் மொழியிலும், வடமொழியிலும், வேறு எந்த ஒரு பகுதியில் உள்ள எந்த ஒரு மொழியிலும் தில்லை நடராசப் பெருமானை மெய் உணர்வோடு உள்ளம் உருகி யார் பாடினாலும், மாலவனும் நான்முகனும் திருவடி காண முடியாதவாறு திகழும் பரமேசுவரனுக்கு அன்பராகியவர் ஆவர் என்பதாகும். நம் காட்டுப் பிரதேசத்தில் உள்ளவர்கள் பேசும் மொழியிலிருந்து நாடோடிகளாய் திரியும் மக்கள் பேசும் மொழி வரை அனைத்துமே தேசிகம்தான்.

எந்த மொழியிலும் உள்ளம் உருகப் பாடுவதுதான் ஈசனுக்கு உவப்பானதாகும்.இவை பெரிய புராணம் எனும் பெட்டகத்தில் திகழும் ஒரு சில ஒளிரும் மணிகள்தாம். தொகை அடியார் அனைவர் வரலாற்றையும் உண்மை உணர்வோடு நாம் படிக்கும்போது சாதிகள் மொழிகள் இவை கடந்த ஒரு மெய்யன்புதான் சிவநெறி என்பது நமக்குப் புரியும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You may also like

Leave a Comment

19 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi