ஒரு மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய கைக்கடிகாரத்தை தொலைத்தார் விவசாயி. தன்னுடைய நெருங்கிய நண்பர் பரிசாக கொடுத்தது அது. அவரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. தன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து கைக்கடிகாரத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு அளிப்பதாக வாக்களித்தார். எல்லா சிறுவர்களும் ஆர்வமாக தேடினர். வெகுநேரமாகியும் எல்லா இடங்களிலும் தேடியும் கடிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. மாலை நேரமானதால் குழந்தைகள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
சோர்வடைந்த விவசாயி கவலையுடன் அமர்ந்துவிட்டார். ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் வந்து ‘‘ஐயா எனக்கு ஒரு நிமிடம் வாய்ப்பு கொடுங்கள், என்னால் கண்டு பிடித்து விட முடியும்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னான். விவசாயியும் நம்பிக்கையின்றி சிறுவனுக்காக சம்மதித்தார். சிறுவன் ஒரு நிமிடத்தில் கைக்கடிகாரத்தை கொண்டுவந்து விவசாயிடம் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட விவசாயி ‘‘எப்படி உன்னால் முடிந்தது’’ என்று கேட்டார்.
‘‘ஐயா நாங்கள் கூட்டமாக தேடும்போது, கடிகாரம் எங்கு உள்ளது என கண்டுபிடிப்பது கடினம். இப்போது சிறுவர்கள் யாரும் இல்லை அமைதியான சூழலில் கண்களை மூடி சில நொடிகள் கவனித்தேன். அப்பொழுது கடிகாரத்தின் டிக் டிக் ஓசை எனக்கு கேட்டது. ஆகவே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது’’ என்றான். சிறுவனுடைய அறிவுத்திறனைக் கண்டு விவசாயி பரிசளித்தார்.
இறைமக்களே, இறைவேதத்தின் தேவன் இன்றும் நம்முடன் பேசுகிறார். நாம்தான் தனித்திருந்து முழுமனதுடன் அவருடைய சத்தத்தைக் கேட்பதில்லை. அமைதியான அதிகாலை நேரத்தில் தெய்வீக தியானத்தில் ஈடுபடுவதை இறைவேதம் வலியுறுத்துகிறது. ‘‘என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்’’ (நீதி 8:17) எனத் தேவன் கூறுகிறார்.
பதறுகிற எவரும் வாழ்வில் சரியான முடிவுகளை எடுக்கமுடியாது. தொலைந்துபோன ஆறுதலையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க ஆடம்பரமற்ற வாழ்வையும், அமைதியான மனதையும், நம்பிக்கையுள்ள இறைத்தேடலையும் பொக்கிஷமாக காத்துக்கொள்ளுங்கள்!
– அருள்முனைவர்பெ.பெவிஸ்டன்.