*அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
கோவில்பட்டி : மானாவாரி நிலங்களில் விளையும் பயிர்களுக்கு ஏற்ற விதைகளை அரசு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவம் கடந்த புரட்டாசி மாதம் தொடங்கியது. சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குண்டு மிளகாய், நாட்டுரக கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பருத்தி, சூரியகாந்தி, எள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இங்குள்ள நிலங்கள் கரிசல், செவல், பொட்டல், குறுமண் போன்ற வகைகளாகும். ஒரே கிராமத்தில் பல மண் தன்மையுடைய நிலங்கள் உள்ளன.
செவல் மற்றும் குறுமண் நிலங்களில் பருப்பு வகைகளும், பொட்டல் நிலங்களில் வெள்ளைச்சோளம், எள், பயறு வகைகளும், சுத்த கரிசல் நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், கொத்தமல்லி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவைகள் பயிரிடுவார்கள். கடந்த புரட்டாசி மாதம் விதைப்பு செய்து போதிய மழை பெய்யாததால் விதைகள் கெட்டுவிட்டன. அதனை மறுமடியும் உழுது விதைப்பு செய்தனர். சற்று தாழ்வான பகுதி நிலங்களில் முளைத்த விதைகள் மேட்டுப்பகுதியில் முளைக்கவில்லை.
வடகிழக்கு பருவமழை காலதாமதமாக ஆரம்பித்ததால் பயிர்கள் வளமின்றி காணப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்வதால் தாழ்வு பகுதி நிலங்களில் உள்ள பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இவை தவிர தொடர்மழையால் களை பயிரை சுற்றி இடைவெளியின்றி முளைக்கின்றன. நிலங்களில் அதிக ஈரம் காணப்படுவதால் களை பறிக்க முடியவில்லை.
இதனிடைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு ஆட்கள் சென்று விடுவதால் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்காண்டு செலவுகள் மற்றும் சம்பளம் அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் மகசூல் விலை மட்டும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தையை விலையே தற்போதும் நீடிக்கிறது. இதனால் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் கவுரவ தொழிலாக மாறிவிட்டது.
இவை தவிர கடந்த காலங்களில் அரசு விவசாயிகளுக்கு உழவு மானியம், விதை மானியம், உரம் மானியம், மருந்து மானியம், தெளிப்பு மானியம், மகரந்த சேர்க்கைக்கு என மானியத்தை பணமாக வழங்கியது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மானியத்தை பணமாக வழங்காமல் விதை, மருந்து, உரம் என வழங்கி வருகிறது. அந்தந்த பகுதி நிலங்களுக்கேற்ற வகையில் விதை, உரம், மருந்து வழங்காமல் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் காயாக ஊன்றி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அரசு காயாக வழங்காமல் விதையாக வழங்குகிறது. விதை பதியம் போட்டு அதை பறித்து நிலங்களில் ஊன்றி விழுப்புரம், பாவூர்சத்திரம், நாமக்கல் போன்ற பகுதியில் விவசாயம் செய்கின்றனர். வெங்காயம் விதை மூலம் இங்கு விவசாயம் செய்யப்படுவதில்லை. கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகளில் நாட்டுரக கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அரசு வடமாவட்டம் மற்றும் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பயிரிடுகின்ற லயன் கொத்தமல்லி விதைகளை தென் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குகிறது.
நாட்டு ரக கொத்தமல்லி மிகவும் மனமுள்ளதாகவும், காரத்தன்மையாகவும் இருக்கும். லயன் கொத்தமல்லி மணமோ காரத்தன்மையோ இராது. பெரும்பாலும் இப்பகுதியில் அதிகமாக முண்டு வத்தல் எனப்படும் குண்டு வத்தல் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஆனால் அரசு சம்பா வத்தல் விதையை வழங்குகிறது. ஒவ்வொரு பகுதி மண்ணுக்கும் ஒவ்வொருவிதமான பயிர்கள் அதிக விளைச்சலை தரும்.
ஆனால் அதைவிடுத்து பயிரிட முடியாத விதைகளையும், பயன்படுத்த முடியாத மருந்துகளையும், மண்ணிற்கேற்ற விதைகளை வழங்காமல் எந்த பயனும் இல்லை. கடந்த காலங்களில் வழங்கியது போல விதை, உரம், மருந்து இவற்றை பொருளாக வழங்காமல் பணமாக மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.