Friday, June 13, 2025
Home செய்திகள் விதைப்பண்ணை அமைப்பும்…உளுந்து விதை உற்பத்தியும்!

விதைப்பண்ணை அமைப்பும்…உளுந்து விதை உற்பத்தியும்!

by Porselvi

விதைப்பண்ணை அமைத்து தரமான உளுந்து விதைகளை உற்பத்தி செய்வது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்துறை அலுவலர் வி.குணசேகரன் கடந்த இதழ்களில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது. கலவன் அகற்றுதல்: ஒரு ரகத்தைச் சேர்ந்த பயிர்களில் பிற ரகப் பயிர்கள் கலப்பது கலவன் எனப்படுகிறது. இத்தகைய கலவனை அகற்றுவது ஒரு முக்கியமான பணி. உளுந்தினைப் பொருத்தமட்டில் பூக்கும் முன்பும், பூ பருவத்திலும், காய்ப் பருவத்திலும், அறுவடைக்கு முன்பும் கலவன் கட்டாயம் அகற்ற வேண்டும். முளைத்த 25வது நாளில் கலவனை முதலில் அகற்ற வேண்டும். பிற ரக செடிகள், கொடி, ஓடிய செடிகள் மற்றும் அழுகல் நோய், வாடல் நோய், மஞ்சள்நோய், தேமல்நோய் தாக்கிய செடிகள், பூக்கும் சமயத்தில் மலர்களின் நிறம் மாறிய செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். காய்ப் பிடிப்பின்போது காய்களின் நிறம், நீளம் மற்றும் முடி போன்றவற்றைக் கொண்டு கலவன்களை பிரித்தறியலாம். அறுவடைக்கு முன் விதைகளின் நிறம் மற்றும் உருவம் கொண்டு கலவன் அகற்ற வேண்டும்.

அறுவடை: விதைத்த 55-60 நாளில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். காய்கள் பழுப்பு நிறமடைந்தால் காய்களை அறுவடை செய்யலாம். 70 சத காய்கள் கருமை நிறமடைந்தால் செடிகளை முழுவதும் பிடுங்கலாம். தாமதித்தால் காய்கள் வெடித்து சிதறி வீணாகும். அறுவடைக்கு முன் எண்டோசல்பான் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் பயறு வண்டுகளின் தாக்குதல் குறையும்.அறுவடை செய்தவுடன் செடிகளைக் களத்தில் காயப்போட வேண்டும். களத்தில் ஒரே ரக விதைகள் மட்டுமே இருக்க வேண்டும். இல்லையென்றால் இனக்கலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. செடிகளிலிருந்து குச்சி கொண்டு அடித்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பின்னர் தூற்றி நிழலில் காய வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் 10 சதம் என்ற அளவு வரை காய வைக்க வேண்டும்.

நல்ல விதைகளைப் பிரித்தெடுக்க 2.36 மி.மி கொண்ட வட்ட வடிவ கண் கொண்ட சல்லடையைக் கொண்டு சலிக்க வேண்டும். பின்னர் பூசணம் தாக்கிய விதைகள், சுருங்கிய விதைகள், உடைந்து தோலுரிந்த விதைகள் போன்றவற்றை நீக்கி தூசு தும்பு அகற்றி தரமான விதைகளைச் சேமிக்க வேண்டும். விதைகள் அதிக ஈரப்பதத்துடன் இருந்தால் முளைப்புத்திறனை வெகு விரைவில் இழக்கின்றன. நீண்ட கால சேமிப்பிற்கு விதைகள் 8 சதத்திற்கும் குறைவாக ஈரப்பதம் இருக்க வேண்டும். விதைகளைச் சேமிக்கும் முன் கேப்டான் அல்லது திரம் 4 கிராம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து சேமிக்கலாம்.

விதைகளைச் சேமிக்க எப்போதும் புதிய பைகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் விதை மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது 6-7 அடுக்கிற்கு மேல் அடுக்கக்கூடாது. அதிக பாரத்தினால் அடியில் உள்ள மூட்டை களில் உள்ள விதைகள் பாதிக்கப்படும். விதைக்கலன்கள் தரையிலோ அல்லது சுவரிலோ நேரிடையாக படக்கூடாது. தரையில் அல்லது சுவரில் உள்ள ஈரம் விதைகளினால் உறிஞ்சப்பட்டு விதை களின் தரம் பாதிக்கும். விதைகளை மரக்கட்டைகளின் மேல் அல்லது தார்ப்பாய்களின் மேல் அடுக்கி வைக்க வேண்டும். விதையின் சேமிப்புக் காலத்தில் பூச்சிகள் இல்லாமல் கிடங்கினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகை மூட்டம் அல்லது செல்பாஸ் மருந்து கொண்டு நச்சுப் புகை மூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் போடவேண்டும்.

வேளாண்மைத் துறையால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் அனைத்து விதைகளும் விதைச்சான்றளிப்புத் துறையினால் பரிசோதிக்கப்பட்டு தரமான விதைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் ஆதார விதைகளை வாங்கும்போதே சான்றட்டை எண்ணுடன் பட்டியலிடப்பட்டு உரிய படிவத்தில் உற்பத்தியாளர் பெயருக்கு விதைப்பண்ணை பதிவு செய்யப்படுகிறது.பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணையினை அந்த பகுதியைச் சேர்ந்த விதைச்சான்று அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டு விதையின் ஆதாரம், தனிமைப்படுத்தும் தூரம், கலவன் நீக்குதல், அறுவடை சமயம், விதை சுத்திகரிப்பு, மற்றும் கொள்முதல் செய்த விதை களின் முளைப்புத்திறன் மற்றும் சான்றட்டை பொருத்தி சிப்பமிடுதல் வரை விதைச்சான்றளிப்புத்துறை செயல்பட்டு தரமான விதைகளுக்கு மட்டும் விதைச் சான்றளிப்பு செய்யப்படுகிறது. சான்றளிப்பு செய்த விதைகள் மட்டும் வேளாண்மைத் துறையால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சான்று பெற்ற விதையில் 98 சதம் சுத்தமான விதைகள் இருக்கும். குறைந்தபட்ச முளைப்புத்திறன் 75 சதம் இருக்கும்.

விதைப்பண்ணை அமைத்து பதிவு செய்து தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் கிடைப்பதால் அதிகளவில் லாபமும் கிடைக்கிறது. எனவே விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறையை அணுகி விவரங்கள் பெறலாம்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi