புதுடெல்லி: தேசத்துரோகம் தொடர்பான ஐபிசி சட்டப்பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்ற பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 11ம் தேதி தேசத் துரோகச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் வரை நிறுத்தி வைத்து, புதிய எப்ஐஆர் எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசுக்கும், மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே பி பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இதுபற்றி விசாரிக்க அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். அதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் (இபிகோ) விதிகளை ஒட்டுமொத்தமாக மாற்றிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். அவர்கள் கூறும்போது,’ தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்து, குற்றத்தின் விரிவான வரையறையுடன் புதிய சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தும் மசோதா சட்டமாக மாறும். எனவே 5 நீதிபதிகளுக்கும் குறையாத அரசியல் சாசன அமர்வு இதுபற்றி விசாரிக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.