நன்றி குங்குமம் ஆன்மிகம்
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
இழவுற்று நின்ற நெஞ்சே
என்பதனால், இழவு என்பதற்கு உயிர் அற்ற வெற்றுடலுக்கு செய்யப்படும் சில சடங்குகளை குறிப்பிடுவர். அதையே அபிராமி பட்டர், சாத்திர நெறி சார்ந்து உடலைபற்றி நினைக்கும் உள்ளத்தை பற்றி குறிப்பிடுகிறார். உள்ளமானது மூன்று சிந்தனைகளைப் பெற்றது ஒரே நேரத்தில் உடலைப் பற்றியும், ஆன்மாவை பற்றியும், சிவத்தை பற்றியும் நினைக்க வல்லது. அப்படிப்பட்ட சிறந்த வல்லமை வாய்ந்த உள்ளமானது உயர்ந்ததை நினைக்காமல், உயர்ந்த சிவத்தைவிட்டு, உயர்ந்த ஆன்மாவை விட்டு, இழிவான அழியத்தக்க உடலையே அதிகமாக சிந்தித்து துன்புறுகிறது. மகிழ்ச்சியை இழக்கிறது. தன் போக்கை மாற்றிக் கொள்ள மறுக்கிறது இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற மனதை “இழவுற்று நின்ற நெஞ்சே” என்று தன் நெஞ்சை பற்றி, தானே கூறுவது போல், தன் மனதுடன் பேசுகிறார்.
“இழவு’’ என்ற சொல்லால் மனமானது உண்மையறியாமல், பயிற்சி இல்லாமல் சூழலையே முதன்மையாகக் கொண்டு கருத்தையே முதன்மையாகக் கொண்டு, தான் பெற்ற அனுபவத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு சிந்தித்து அதன் வழி செய்யக்கூடியது. இப்படி செல்லும் மனதை நம் வசப்படுத்துவதற்கு அடக்கி ஆள்வதற்கு மனதைக் கொண்டேதான் நாம் முயற்சி செய்ய வேண்டியுள்ள மனதை மனதாலேயே வெல்லவேண்டும்.
பிறிதொருசக்தியால் மனதை வெல்ல இயலாது. காலம் இடம் நிகழ்வு சார்ந்து அது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது, அதன் வழியிலேயே சென்று உன்னத நிலைக்கு மாற்ற நினைக்கிறார். அதனால்தான் “நின்ற” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். “நின்ற’’ என்பது வெறுமையான நெஞ்சு பிறந்த குழந்தையினுடையது. அதற்கு எந்தப் பதிவும் இல்லாதது. அதே சமயம், தொண்ணூறு வயது வாழ்ந்த ஒரு மனிதனின் நெஞ்சு, அனைத்துப் பதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடே வாசனா மலம் என்கிறது ஆகமம். சித்த விருத்தியின் மிகுதி என்கிறது யோக சாத்திரம். இத்தகைய விருத்திகளை, அதாவது, “நின்ற நெஞ்சே” என்று எண்ணப் பதிவுவையே குறிப்பிடுகின்றார். ‘ஊரு முருகு, சுவை, ஒளி ஊரொளி ஒன்றுபடச் சேரும் தலைவி’ (68) என்ற வாக்கினால் அறியலாம்.
மேலும், செயல்களில் ஒன்று பிற நிலையை நீங்கி நிற்கும் பண்பை நீங்கி என்றார். “இழவுற்றுநின்ற நெஞ்சு” என்பதால் இழவு என்ற சொல்லிற்கு இழத்தல் என்றும் பொருள். மனது நினைவை இழந்துவிடுவதை மறதி என்கிறார்கள். உயிர் உடலை இழந்து விடுதலை பெறுவதை மரணம் என்கின்றார்கள். மனது ஒரு மகிழ்ச்சியை இழப்பதை துக்கம் என்கிறார்கள். இதுபோல, ஆத்மா தன் அறிவை இழப்பதை அஞ்ஞானம் என்கின்றார்கள். இது அத்தனையும் சேர்த்ததே “இழவுற்று நின்ற” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.
மனது, தான் எண்ணியதையே மீண்டும்மீண்டும் நினைக்கக்கூடியது. இதை ஆவ்ருத்தி என்பர். மேலும், மனது சில எண்ணங்களை சில நினைவுகளை ஏற்க மறுத்துவிடும். அந்த நினைவையும் “நின்ற” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மேலும், சில மறக்க வேண்டிய நினைவுகளை மறக்க இயலாத நிலையை “நின்ற” என்கின்றார். இதனைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார். ‘கரும நெஞ்சால்’ (3), ‘ஆசைக்கடலில்’ (32) ‘நினைக்கின்றிலேன்’ (54), `உண்ணாது ஒழியினும்’ (55), ‘நெஞ்சில் நினைகுவிரேல்’ (54). இதையே “இழவுற்று நின்ற நெஞ்சே” என்கிறார்.
இரங்கேல் உனக்கென் குறையே
மனமானது அடைந்ததை மறந்து அடையப் போவதையே நினைத்து மயங்கக் கூடிய தன்மை உடையது. அந்த பண்பையே இரங்கேல் என்கிறார். சதா சர்வ காலமும் கடந்தகால அனுபவத்தை கொண்டு, நிகழ்காலத்தை நினைக்க முயன்று, இரண்டு காரணங்களை ஒப்பிட்டு எதிர்காலத்தை எண்ணி, மயங்கும் இயல்புடையது. தன்குறையை நிறைவு செய்ய முயற்சி செய்து கொண்டேயிருப்பது.
அபிராமி பட்டரோ, தன் மனதை செவ்வனே அப்யாசித்து, குறை அற்றதாக ஆக்கியிருக்கிறார். `அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே’ (31), `ஆசைக்கடலுள் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’ (31) இந்த இரண்டு வரிகளையும் ஒப்புநோக்கி உமையம்மையின் அருளால் உனக்கு நல்ல கதி கிடைக்கும். ஆனால், அதை செய்ய மறுக்கிறாய். இதையே, “இரங்கேல் உனக்கென் குறையே” என்கிறார்.
அந்தமாக
“அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி” என்று அபிராமியையும், “அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்” என்பதால் சாத்திரங்களையும், ஆசாரங்களையும், “பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க” என்பதால் சக்தி லிங்கத்தையும்,“இழவுற்று நின்றநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே” என்பதால் தியானம் செய்ய மறுக்கிறாயே என்றுகூறி, தன் நெஞ்சை பிரார்த்தனையில் ஈடுபடச் சொல்கிறார் அவ்வழியை பின்பற்றுவோம்.
தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்