‘‘சுற்றுலா தலமான புதுச்சேரியில் சொகுசு கப்பல் வருகைக்கு உள்ளூர் மீனவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்காமே..’’ என முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலா பயணிகள் அதிகளவில் சங்கமிக்கும் இடங்களில் ஒன்றாக புதுச்சேரி மாறியுள்ளதாம்.. இதனால் சுற்றுலாவை மேம்படுத்த பல வியூகங்களை புல்லட்சாமி அரசு தீட்டி வருகிறதாம்.. இதன் ஒரு பகுதிதான் கார்டில்லா சொகுசு கப்பல் திட்டமாம்.. சுமார் 1,400 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த கப்பலானது வைசாக்கில் இருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு வந்து செல்ல உள்ளதாம்.. ஒருநாள் அங்கேயே முகாமிடும் நிலையில், பயணிகள் புதுச்சேரியில் தங்கி இளைப்பாறி மறுநாள் சொகுசு பயணத்தை மீண்டும் தொடர்வார்களாம்.. இதற்காக கடற்கரை முகத்துவாரத்தில் இருந்து ஒன்றரை கிமீ தூரத்துக்கு சிறிய ரக கப்பல் பயணிக்குமாம்.. இதனால் மீன்பிடி வலைகள், தொழில் பாதிக்கப்படலாம் என்பதால் உள்ளூர் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம்.. போதை பொருள் கடத்தலுக்கும் இது வழிவகுக்கும் என்பதால் கட்சிகளும் போர்க்கொடி தூக்கி இருக்கிறதாம்.. ஆனால் புல்லட்சாமி அரசோ அமைதி காக்க, கடற்கரை கிராமங்களில் இதுபற்றிதான் பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் வராம ஊழியர்களை ஒருமையில் பேசும் பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்னு குரல்கள் ஒலிக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்துல, சமூகத்தோட நலன் சார்ந்த அலுவலகம் இயங்கி வருது.. இந்த அலுவலகத்தோட 3வது தளத்துலதான் அந்த சமூகத்தோட நலன் அலுவலகம் செயல்படுகிறதாம்.. அங்க பணிபுரியுற பெண் அதிகாரி ஒருத்தரு, ஊழியர்களை ஒருமையிலதான் பேசுகிறாராம்.. அதோட அந்த அலுவலக ஊழியர்களை சனிக்கிழமையும் அலுவலகத்துக்கு வர சொல்லிட்டு, இவர் மட்டும் வீட்டுல ஹாயாக ரெஸ்ட் எடுக்கிறாராம்.. அதோடு அலுவலகத்துக்கும் குறித்த நேரத்துக்கு அவர் வர்றதே இல்லையாம்.. அப்படியே வந்தாலும் 4 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு சிட்டா கிளம்பிடுகிறாராம்.. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கண்காணிச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் ஒலிக்க தொடங்கியிருக்குது.. இதனால, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி அப்புறம் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேரூராட்சி ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு ஓய்வூதிய தொகை அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படாம தேங்கி கிடக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்துல மொத்தம் 51 பேரூராட்சி இருக்குதாம்.. இந்த பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் கடந்த 4 மாதங்களாக பிடித்தம் செய்த சிபிஎஸ் தொகை அதாவது பங்களிப்பு ஓய்வூதிய ெதாகை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட வில்லையாம்.. இதனால் அவர்கள் பங்களித்த தொகைக்கான வட்டித் தொகை குறைகிறதாம்.. வழக்கமாக, கருவூவலத்துல இருந்து கணக்கு எண் கொடுத்து அதுலதான் இந்த சிபிஎஸ் தொகை வரவு வைக்கப்படுமாம்.. கருவூலத்துல கணக்கை மாற்றிட்டு, புதிய கணக்கு இன்னும் கொடுக்காமல் இருக்கிறதால, ஊழியர்களின் பணம் அப்படியே பேரூராட்சியில் தேங்கி இருக்காம்.. கருவூலத்துல வேகமாக பணியை முடிச்சு, கணக்கு எண் கொடுக்க நடவடிக்கை எடுங்கனு கோரிக்கை வைச்ச பிறகும் கண்டும்காணாமல் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்து செல்லும் அளவுக்கு மலைக்கோட்டை மாநகரில் ரொம்ப சீக்ரெட்டாக இலைக்கட்சி நிர்வாகிகள் மீட்டிங் நடக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலைக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மீட்டிங் நடத்தி வருகிறார்களாம்.. சில மாதங்களுக்கு முன்பு இலை கட்சியின் சில நிர்வாகிகள் மட்டும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சென்றார்களாம்.. தற்போது, முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்து செல்கிறார்களாம்.. நிர்வாகிகள் வருகை, வெளியே செல்வது எல்லாமே ரொம்பவும் சீக்ரெட்டாக இருக்காம்.. வருகை வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சாதாரண காரில் அவர்கள் வந்து போறாங்களாம்.. இதில், டெல்டாவை சேர்ந்த ஒருசில இலை கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கிறார்களாம்.. இந்த ரகசிய மீட்டிங், சேலத்துக்காரரின் உத்தரவின்பேரில் தான் நடந்துட்டு வருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கும், மலராத கட்சிக்கும் தாவியர்கள் ‘மெடல்’ தொகுதியை குறிவைத்து பம்பரமாக சுற்றிக்கிட்டு இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடந்த முறை மெடல் தொகுதியில் மலராத கட்சி தரப்பில் பம்பரம் கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவி வந்த ஓவியரும், மறைந்த சிரிப்பு நடிகரின் பெயரை முன் பாதியாக கொண்டவர் போட்டியிட்டார். அப்போது கூட்டணியில் இருந்த இலைக்கட்சியினர் கூடவே இருந்து அவருக்கு குழி பறிச்சிட்டாங்க.. இதனால் நொந்து போயிருந்த அந்த மலராத கட்சிக்காரர், வரும் தேர்தலில் தலைமை சீட்டு கொடுத்தால் சந்தோஷம்… இல்லாவிட்டால் ரொம்ப சந்தோஷம் என்ற மன நிலைக்கு வந்துவிட்டாராம்.. இதை மோப்பம் பிடித்த இலை தரப்பினர் எப்படியாவது மெடல் தொகுதியை கூட்டணி கட்சியிடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனராம்.. இந்த தொகுதியை குறி வைத்து இலைத் தரப்பில் பலரும் இப்போதிருந்தே காய் நகர்த்தி வர்றாங்களாம்.. ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்து தலைநகர் அருகே உள்ள தொகுதியில் போட்டியிட்ட மாஜி அமைச்சர், கடந்த சில மாதங்களாகவே தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு அவ்வப்போது விசிட் அடித்த வண்ணம் இருக்கிறாராம்.. அடிக்கடி சேலத்துக்காரரிடம் சென்று தொகுதியின் தற்போதைய நிலவரம் எப்படி என அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.. இவரைப்போல பம்பரத்தில் இருந்து இலை பக்கமாய் சாய்ந்த மாஜியும், இந்த தொகுதியை குறிவைத்துள்ளாராம்.. இந்த கூட்டணியில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதி யார் யாருக்கு கிடைக்கும் என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில் மெடல் தொகுதிக்கு இப்போதே 3 பேர் ரேஸில் பம்பரமாய் சுற்றிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
சீக்ரெட் மீட்டிங் போடும் இலைக்கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post