Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சார்பதிவகத்தை நான்காக பிரிப்பதை கண்டித்து அனைத்து கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: திருப்போரூரில் செயல்படும் சார்பதிவகத்தை நான்காக பிரிப்பதை கண்டித்து, அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்போரூர் தெற்கு மாடவீதியில் கடந்த 1886ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

இந்த, திருப்போரூர் சார்பதிவகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், வண்டலூர் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் இடம் பெறும் கிராமங்கள் குறித்து பதிவுத்துறை வட்டாரங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் திருப்போரூரை தாண்டி உள்ள ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், ஆமூர், அதிகமநல்லூர் ஆகிய கிராமங்கள் திருப்போரூர் சார்பதிவகத்தில் சேர்க்கப்படாமல் கேளம்பாக்கம் சார்பதிவகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கேளம்பாக்கத்தை ஒட்டி உள்ள படூர், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்கள் நாவலூர் சார்பதிவகத்திலும், வெளிச்சை, கொளத்தூர் கிராமங்கள் திருப்போரூர் சார்பதிவகத்திலும் இணைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் நேற்று காலை திருப்போரூர் சார்பதிவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த, ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், அதிமுக நகர செயலாளர் சிவராமன், பாமக மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், மாவட்ட துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வேதா அருள், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வம், புரட்சி பாரதம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆலை சிவலிங்கம், பாஜ நிர்வாகி ரூபாவதி, தேமுதிக நகர செயலாளர் ஜெயச்சந்திரன், புதிய புரட்சிக் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மகளிர் அணி செயலாளர் மலர், திருப்போரூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கதிர்வேல், செயலாளர் சுகுமாறன் மற்றும் பல்வேறு கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருப்போரூர் சார்பதிவகத்தை நான்காக பிரிக்கக் கூடாது, ஒரே வளாகத்தில் புதிய அலுவலகம் அமைக்க வேண்டும். கூடுதல் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், வழக்கறிஞர் முனியப்பன் நன்றி கூறினார்.