சென்னை: திமுகவுடன் எந்த ஒரு ரகசிய கூட்டணியும் கிடையாது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் உள்ள ஆல் இந்தியா ரேடியோவில் ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார். பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 8 மாதங்களுக்கு முன்னர் டி.டி. தமிழை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த தொலைக்காட்சி மக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தினேன்.
பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் தங்கும் கட்டிடம் PM-AY என்ற திட்டத்தின் மூலம், ரூ. 706 கோடியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் ஒன்றிய அரசின் மானியம். 498 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ கடன். இது 80% ஒன்றிய அரசின் திட்டமாகும். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் எந்த அரசியலும் இல்லை. தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்ததன்பேரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் விழாவில் கலந்து கொண்டார்.
கருணாநிதிக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், காமராஜர், அப்துல்கலாம், அம்பேத்கர் ஆகியோருக்கும் இதேபோல நாணயம் வெளியிடப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாஜவினர் பங்கேற்றதால் திமுகவுடன் ரகசிய கூட்டணி என்று சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சியாகும். தலித் ஒருவர் முதலமைச்சராக வர வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் சொல்கிறார்.
பாஜவை சார்ந்தவர்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள் முதல்வர், துணை முதல்வராக இருக்கிறார்கள் என்பதை அவருக்கு பதிலாக சொல்கிறோம். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பது முழுக்க முழுக்க தவறான தகவல். பணிகளை முடித்துவிட்ட பிறகு அதற்கான ஆவணங்களை சரிபார்த்து, வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்த பிறகு அதற்கான நிதியை மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.