திருவனந்தபுரம்: தமிழ்நாட்டிலிருந்து பாலக்காடு வழியாக கேரளாவுக்கு போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி ஆனந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்த போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி போதைப்பொருள் தடுப்புத் துறையினர் மற்றும் சிற்றூர் போலீசார் தமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களில் சோதனை நடத்தினர். இதில் ஒரு காரில் நடத்திய சோதனையில் முன் இருக்கைக்கு அடியில் ஒரு ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ரகசிய அறையில் கட்டுக் கட்டாக அடுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2.975 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அந்த ஹவாலா பணத்தைக் கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அங்காடிப்புரம் பகுதியை சேர்ந்த ஜம்ஷாத்(41) மற்றும் அப்துல்லா(42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹவாலா பணத்தை திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.