சென்னை: கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்காகவும், உரிமைக்காகவும் அறவழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வது முறையற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் வருங்கால மாணவ சமுதாயத்திற்கு கல்வி போதிப்பவர்கள். ஆகவே தமிழக அரசு கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அடக்கு முறையால் இல்லை. நியாயத்தின் அடிப்படையில் பேச வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.