*3வது ஆண்டாக விவசாயிகள் அசத்தல்
ராமநாதபுரம் : வறட்சி, தண்ணீர் பஞ்சம், சீமை கருவேல மரங்கள் அடர்ந்த பகுதி, தரிசு நிலங்கள் என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக இரண்டாம் போகம் நெல் விவசாயம் செய்து விவசாயிகள் சாதித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, போகலூர், நயினார்கோயில், பரமக்குடி உள்ளிட்ட 11 யூனியன்களில் நெல் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது.
கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பயிரிடப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய பிரதான பருவமழையான வடகிழக்கு பருவமழை காலம் கடந்து பெய்தது.
இதனால் முன்விதைப்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் தொடர் மழையால் 65 சதவீத கண்மாய், குளங்கள் நிறைந்தது. மேலும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் கதிர்விடும் தருவாயில் இருந்த சுமார் 1 லட்சம் ஏக்கர் வரையிலான நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 3 கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு வழியாக பரமக்குடி, சத்திரக்குடி, களரி, ராமநாதபுரம் வழித்தடத்தில் உள்ள கண்மாய்கள் நிறைந்தது. ராமநாதபுரம் பெரிய கண்மாயும் முழு கொள்ளவை எட்டியது.கண்மாய், குளத்து தண்ணீரை பயன்படுத்தி இரண்டாம் போக விவசாயம் செய்ய விவசாயிகள் முடிவு செய்தனர்.
அதன்படி சத்திரக்குடி, போகலூர், ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல், ஆர்.எஸ்.மடை, சக்கரக்கோட்டை கண்மாய் பகுதி, திருஉத்தரகோசமங்கை சாலையிலுள்ள களக்குடி, மேலச்சீத்தை, எக்கக்குடி உள்ளிட்ட சில கிராம பகுதிகள் மற்றும் கடலாடி அருகே உள்ள சிக்கல் பகுதி.
பரமக்குடி அருகே பார்த்தினூர் என மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கரில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்கு பிறகு உழவார பணிகளை மேற்கொண்டு ஆடுதுறை-45, கோ-1, ஜோதிமட்டை, நாட்டு மட்டை, ஆர்.என்.ஆர், என்.எல்.ஆர், குழியடிச்சான் உள்ளிட்ட நெல் ரகங்களை விதைத்தனர். அப்போது பெய்த மழைக்கு பயிர்கள் முளையிட்டு வளர தொடங்கியது.
தொடர்ந்து கண்மாய் போன்ற நீர்நிலைகளில் கிடந்த தண்ணீரை பாய்ச்சி களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர்விடும் நிலையை எட்டியுள்ளது. ஓரிரு வாரங்களில் ஈரப்பதம் காய்ந்தவுடன் அறுவடை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் 2ம் போக நெல்பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர்விடும் நிலையை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.வறட்சியான மாவட்டத்தில் தொடர்ந்து 3வது ஆண்டாக விவசாயிகள் 2ம் போகமாக நெல் பயிரிட்டு அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிர் காப்பீடு வேண்டும்
விவசாயிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் பருவமழையை எதிர்பார்த்து நெல் விவசாயம் செய்யப்படுகிறது.இதனால் அரசுகள் பரிந்துரை செய்யும் காப்பீடு நிறுவனங்கள் நவ.15 வரை மட்டுமே காப்பீடு செய்துகொள்ள கால அவகாசம் வழங்குகிறது. ஆனால் போதிய மழையின்மை மற்றும் கனமழை என இரு காலநிலையிலும் மகசூல் பாதிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் கண்மாய்களில் கிடக்கின்ற நீரை பயன்படுத்தி கோடை விவசாயம் செய்யப்படுகிறது. எனவே, இந்த விவசாயத்திற்கு பயிர் காப்பீடு செய்துக் கொள்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி செய்தால் கண்மாய்களில் தண்ணீர் கிடக்கின்ற பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தயக்கமின்றி கோடை விவசாயம் செய்ய முன் வருவார்கள், என்றனர்.