டெல்லி: செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் பணியை செயல்படுத்தி வருவது செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை வாரியம். அனைவரும் முதலீடு செய்யக்கூடிய பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் முக்கிய பணியை செபி செய்கிறது. செபியின் தலைவரை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ள கேபினட் கமிட்டியே நியமிக்கிறது.
இதனிடையே, 2017 ஏப்ரல்.5-லிருந்து 2021 அக்டோபர்.4 வரை செபியின் முழு நேர உறுப்பினராக மாதவி பூரி புச் இருந்துள்ளார். 2022 மார்ச் 2 முதல் தற்போது வரை செபியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், செபி தலைவராக ஊதியம் பெற்று கொண்டு இருக்கும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. 2017-ல் இருந்து இதுவரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி பூரி புச் பெற்றுள்ளதாக பவன் கெரா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
செபியின் முழு நேர அதிகாரியாக இருக்கும் மாதவி பூரி புச், ஐசிஐசிஐ வங்கியில் எப்படி ஊதியம் பெறலாம். செபியில் மாதவி பூரி புச் பணியாற்றுவது குறித்து தேதி வாரியாக விவரங்களை வெளியிட்டு பவன் கெரா கேள்வி எழுப்பி உள்ளார். செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதவி பூரி ஊதியம் பெற்றுள்ளார். ஊழியர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் பங்குகளையும் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பெற்று பயனடைந்துள்ளார். செபியின் முழு நேர உறுப்பினராக இருந்துகொண்டே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஊதியம் பெற்றது ஏன்? எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.