டெல்லி: செபி தலைவர் மாதவி பூரி புச் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி வலியுறுத்தியுள்ளார். செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்று குற்றச்சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை செபி தலைவர் மறுத்தார்.
ஹிண்டன்பர்க் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு மாதபி புச் மீது எழுந்துள்ளது. அதாவது, மாதபி புச் விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் 16.8 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், செபி தலைவர் மாதவி பூரி புச் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கூறியதாவது; மாதவி மீதான புகார்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த அரசுக்கு தயக்கம் ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய பங்குச்சந்தையை முறைப்படுத்த வேண்டிய செபி நம்பிக்கைக்குரியதா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தம் நண்பர்கள் பலர் செபியின் செயல்பாடு குறித்து வினவுவதாக அவர் கூறினார்.
மேலும், பங்குச்சந்தையை முறைப்படுத்த வேண்டிய செபிக்கு என்ன நேர்ந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தியாவின் பங்குச்சந்தை துடிப்புடன் இயங்க வேண்டும் என்பதுவே காங்கிரஸின் நோக்கம். இந்திய பங்குச்சந்தைக்கு அன்னிய முதலீடுகள் வர வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம். பாஜக அரசு யாரை காப்பாற்ற விரும்புகிறது என்றும், மாதவி விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு மவுனமாக இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.