அரக்கோணம்: அரக்கோணம் ரயில்நிலையம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி வைத்த காணொலி காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது ஆட்களின்றி சேர்கள் காலியாக கிடந்தது. நாடு முழுவதும் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தி, மறுசீரமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரக்கோணம், ஜோலார்பேட்டை, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, மயிலாடுதுறை உட்பட 18 ரயில் நிலையங்களில் ரூ.515 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.
இதில் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.54.66 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி தொடக்க விழா காணொலி காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்ச்சியில், பிரதமர் காணொலி காட்சி வாயிலாக பேசும்போது பொதுமக்கள் கேட்பதற்காக அரக்கோணம் ரயில்நிலையத்தில், சேர்கள் போடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி பேசும்போது ஆட்கள் யாரும் இன்றி நாற்காலிகள் காலியாக கிடந்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.