‘‘சேலத்துக்காரர் அணிக்கு தாவிய பிறகும் பிரகாசமான வாய்ப்பு இல்லையேன்னு ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர் தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலைக்கட்சி மாஜி அமைச்சர் ஒருவர் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணிக்கு வந்தார். இதனால் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என இருந்த அவருக்கு இன்னும் பிரகாசமான வாய்ப்பு அமையவில்லையாம்.. எதிர்கட்சி தலைவர் சுற்றுப்பயண விவரம் கூட மாஜி அமைச்சருக்கு தெரியாமல் மற்றொரு மாவட்ட மாஜி அமைச்சரான மணியானவர் கூட்டணி ரகசியமாக செயல்பட்டு வருகிறதாம்.. இதனால், தனது எதிர்காலத்தை எண்ணி தேனிக்காரர் அணியில் இருந்து ஓடி வந்த மாஜி அமைச்சர் ரொம்பவே விரக்தி அடைந்து இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனிக்குள் நடக்கும் மோதலால் எதிர்காலம் குறித்து முணுமுணுக்கும் நிலைக்கு போயிட்டாங்களாமே விசுவாசிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கட்சிக்குள் தந்தை, மகன் மோதல் முடிவுறாத நிலையில் கோஷ்டிகள் அதிகரித்தபடி இருக்கிறதாம்.. தந்தைக்கு தாமரையின் நெருக்கடி அதிகமாக முட்டுக் கொடுக்கும் வகையில் கையின் ஆதரவுக்கரம் சமீபத்தில் தைலாபுரம் சென்றதாம்.. இதை வைத்து இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட வேண்டுமென சில விஷமிகள் வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பரப்பினார்களாம்.. ஆனால் பானையும், தைலாபுரமும் எந்த ரியாக்ஷனும் இன்றி அமைதியாக பயணிப்பதால் இத்திட்டம் புஷ்வானம் ஆகிவிட்டதாம்.. நிலைமை இப்படியிருக்க அன்பானவரோ திடீரென டெல்லிக்கு விசிட் அடிக்க தைலாபுரம் தற்போது பரபரப்பாகி உள்ளதாம்.. தனக்குதான் அதிகாரம் என தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் முறையிட சென்றுள்ள தகவல் கசிய, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சட்ட வல்லுனர்களுடன் ரகசிய ஆலோசனையில் இறங்கியுள்ளாராம் தந்தையானவர். தோட்டத்துக்கு நெருக்கமான சிலர் துணையாக உள்ளார்களாம்..
எப்படியாவது மோதல் படிப்படியாக முடிவுக்கு வந்துவிடும் என பார்த்தால், சின்னத்துக்கே ஆப் ஆகிடும் வகையில் இருவரின் செயல்பாடுகள் நகர்வதால், உண்மையான விசுவாசிகள் கட்சியின் எதிர்காலம் குறித்து முணுமுணுத்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னமுட்டம் துறைமுகத்தில் தனியார் வாகன பார்க்கிங்கிற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்தது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தின் முதல் மீன்பிடி துறைமுகம் சின்னமுட்டத்தில் உள்ளது. இங்கு தற்போது எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல், துறைமுகத்திற்குள் உள்ள இடத்தை தனியாருக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அதிகாரிகள் கொடுத்துள்ளனராம்.. இதுபோல் ஒவ்வொருவரும் இடத்தை பிடித்தால், துறைமுகத்திற்குள் தேவையற்ற பிரச்னைகள்தான் வரும் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்காம்.. எனவே துறைமுக நிர்வாகமே நேரடியாக இதுபோன்ற வாகனம் நிறுத்த மற்றும் மீன் ஏலக்கூடங்களை அமைத்து தர வேண்டும். அவ்வாறு துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மீன்வளத்துறையே அமைத்து கொடுத்தால், அதில் யாரும் உரிமை கோர முடியாது என மீனவர்கள் சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலைக்கட்சியின் நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் மரியாதையான சொல்லுடன் துவங்கும் சட்டமன்ற தொகுதிக்கான இலைக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்காங்க.. இத்தகவல் அம்மாவட்ட இலைக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.. மாவட்டச் செயலாளரான சாமியின் பெயரைக் கொண்டவர், வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது மரியாதையுடன் துவங்கும் தொகுதியில் சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வேலை பார்த்து வருகிறாராம்.. தற்போது இந்த தொகுதிக்குட்பட்ட 3 ஒன்றியச் செயலாளர்கள் சீட் வாங்கும் போட்டியில் உள்ளனராம். கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டவரான தமிழ் மாதத்தின் முன்பாதியைக் கொண்டவரும் சீட்டுக்கான ஓட்டத்தில் உள்ளாராம்.. ஒன்றியங்கள் 3 பேரும் இருந்தால், தனக்கு சீட் கிடைக்க விடமாட்டார்கள் என்றும், அப்படியே கிடைத்தாலும் எதிர்த்து வேலை பார்ப்பார்கள் என்றும் முடிவு செய்த மா.செ, கட்சி நிர்வாகிகளை தூக்கியடிப்பதில் மும்முரமாய் உள்ளாராம்.. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடும் நிலையில் மா.செ.வின் செயல் இலைக்கட்சிக்குள் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எதிர்காலம் கருதி இலைக்கட்சியில் மீண்டும் ஐக்கியமாகி விடலாமா என சக நிர்வாகிகளிடம் குக்கர்கட்சியினர் போன்போட்டு விசாரிக்கிறாங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தென் மாவட்டங்களில் ஒரு நேரத்தில் ஓங்கியிருந்த குக்கர் கட்சியினர் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் உள்ளதாக சக நிர்வாகிகளிடம் புலம்பி வருகின்றனராம்.. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலைக்கட்சியும், மலராத தேசிய கட்சியும் மீண்டும் ஒட்டிக்கொண்டதாம்.. ஆனால், ஏற்கனவே மலராத தேசிய கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள குக்கர்காரரின் நிலைமைதான் பரிதாபமாக இருக்காம்.. அவ்வப்போது கூட்டணியில்தான் இருக்கிறோம் என வாய்ஸ் கொடுக்கும் குக்கர்காரர் அதை உறுதிப்படுத்தி வருகிறாராம்.. எனினும் அவரது பின்னால் அணிவகுக்க அல்வா உள்ளிட்ட தென்மாவட்ட குக்கர் கட்சியினர் இருக்கும் இடம்தெரியாமல் ஆகிவிட்டார்களாம்.. இவரை நம்பி களத்தில் குதித்தோம், பதவியையும் இழந்தோம், இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் வருது.. கட்சிக்கு அங்கீகாரம் தேர்தல்தான்.. கட்சியிலிருந்து பிரிந்த குக்கர்காரரையும் தேனிக்காரரையும் சேர்ப்பதில்லை என்பதில் சேலம்காரம் உறுதியாக இருக்கிறார்.. இந்தநிலையில் நமது அரசியல் எதிர்காலம் என்ன என குக்கர்காரர் அணியினர் யோசிக்க தொடங்கி உள்ளார்களாம்.. இலைக்கட்சியில் மீண்டும் ஐக்கியமாகி விடலாமா எனவும் தங்களுடன் குக்கர்காரர் அணியில் உள்ளவர்களிடம் போன் போட்டு விசாரிக்க தொடங்கி உள்ளார்களாம்.. இதனால் விரைவிலேயே மிஞ்சி விஞ்சி இருக்கும் குக்கர்காரர்களும் இலைக்கட்சியில் ஐக்கியமாகி விடுவார்கள் போல தெரிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
சீட்டுக்காக போட்டி போடும் இலைக்கட்சி நிர்வாகிகள் தூக்கி அடிக்கப்படுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post