சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர். சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், அரசியல் உள்நோக்கத்தில் தங்களை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அருள் செல்வம், மனு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.