திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டம், ஈக்காடில் இருந்து கல்யாணகுப்பம் செல்லும் சாலையில் சுப்பிரமணி மற்றும் 4 நபர்களுக்கு சொந்தமான இடத்தில் திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த அப்புன் என்பவர் உரிய அனுமதி பெறாமல் வணிக நோக்கத்தில் நாட்டு வெடிகள், பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர், உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, வட்டாட்சியர் மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.
அப்போது அந்த இடத்தில் உள்ள மெட்டல் ஷீட் கொண்டு அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகை உள்ளே சுமார் 25 கிலோ நாட்டு வெடிகள், பண்டிகை, திருவிழா மற்றும் ஈமச்சடங்குகளில் பயன்படுத்தும் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அனுமதி பெறாமல் பட்டாசு சேமித்து வந்த மாட்டு கொட்டகை சீல் வைக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது மண்டல துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசனா சத்யா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.