Monday, February 26, 2024
Home » கடல் உணவுகளில் ஸ்பெஷல் காம்போ!

கடல் உணவுகளில் ஸ்பெஷல் காம்போ!

by Lavanya

கிளவுடு கிச்சன் டூ ரெஸ்டாரென்ட்…

கல்லூரி முடித்ததும், அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு வேலைக்கு செல்லலாம் என்பதுதான் பல மாணவர்களின் யோசனையாக இருக்கும். ஆனால் அரவிந்த் சுரேஷ்-ம் ரிச்சி ரிச்சர்ட்டும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக உதித்ததுதான் மீன்சட்டி என்கிற உணவகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் செயல்பட்டு வந்த இந்த உணவகம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஆம் கல்சட்டியின் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் உணவகம் தற்போது வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் அருகில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த தருணத்தில் அரவிந்த் சுரேஷ், ரிச்சி ரிச்சர்ட் ஆகியோரைச் சந்தித்தோம். “கல்லூரி படிக்கும்போதே பிசினஸ் சம்பந்தமாக படித்ததால், அப்போதே சொந்த தொழில்தான் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். படிப்பு முடிந்ததும் என்ன செய்யலாம்? எதைச் செய்யலாம்? என்ற தேடல்கள். அப்போது, ரிச்சர்ட்தான் உணவு சம்பந்தமான தொழிலில் இறங்கலாம் என்றார்.

அந்த சமயத்தில், ஒரு பெரிய பர்கர் நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அதற்கு 40 லட்ச ரூபாய்க்கும் மேல் தேவைப்பட்டது. அவ்வளவு பணத்தை வேறு ஒரு பிராண்டுக்காக செலவு செய்வதை விட நாமே ஏன் ஒரு உணவு பிராண்டை தொடங்கக்கூடாது என யோசித்தோம். என் அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த மீன் குழம்பின் சுவை எங்கள் இருவரின் கவனத்தையும் ஈர்க்க, மீனையே பிரதான உணவாக கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஏனென்றால் அசைவப் பிரியர்களின் ஃபேவரைட் லிஸ்டில் எப்போதும் மீன் குழம்புக்கு தனியிடம் உண்டு. அதிலும் கிராமப்புறங்களில், மண்சட்டியில் சமைக்கப்படும் மீன் குழம்புக்கு ஒரு தனித்துவமான மணமும் ருசியும் உண்டு. இந்த நவீன காலக்கட்டத்தில் பெரும்பாலானோரின் வீடுகளில் மண்சட்டியில் மீன்குழம்பு வைப்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. எனவே, தமிழரின் பாரம்பரிய உணவை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் இது இருக்கட்டுமே என்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் இந்த மீன்சட்டி ஐடியா.

அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்திருந்த நிலையில், கோவிட் லாக்டவுன் வந்தது. உணவகம் திறப்பதை கைவிட்டு, ஆன் லைன் பிசினஸாக தொடங்கினோம். பீட்சா, பர்கரை எப்படி டப்பாவில் வைத்து நீட்டாக பேக் செய்து டெலிவரி செய்கிறார்களோ, அதுபோன்று, மண்சட்டியில், நீட்டான ஒரு பேக்கிங்காக மீன் குழம்பை வைத்து பேக் செய்து டெலிவரி செய்ய நினைத்தோம். இதற்காக மண்பானை செய்யும் பலரிடம் பேசினோம். நாங்கள் ஒரு டிசைன் செய்து கொடுத்தோம். அதற்கு ஏற்ப மண்பானை தயாரித்துக் கொடுத்தனர். வழக்கமாக சந்தையில் இதுபோன்ற டிசைன்களில் மண்பானை செய்யப்படுவதில்லை. சில நிறுவனங்கள் உலகம் முழுக்க பீட்சாவை விற்பது போல, நம் தமிழ்நாட்டின் மீன் குழம்பை ஒரு பிரண்டாக மாற்றி, அதை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். எல்லாம் கைகூடி வந்ததும், 2021-ல் மீன்சட்டி ஆன்லைன் நிறுவனத்தைத் தொடங்கினோம். இதன் மெனுவில் மீன்குழம்பு மட்டும்தான், அதாவது, ஒரே ஒரு ஃபேமிலி பேக் மட்டும்தான் இருக்கும்.

அந்த ஃபேமிலி பேக்கில் ‘‘மண் பானையில் வைத்த மீன் குழம்பு, (அதில் ஒரு கிலோ கொடுவா மீனின் தலை, வால் மற்றும் சில பீஸ்கள் இருக்கும்) அடுத்து நான்கு ஸ்லைஸ் மீன் வறுவல், சுமார் ஒன்றரை கிலோவுக்கு அரிசி சாதம் இருக்கும். இதுதவிர 500மி.லி ரசம் மற்றும் இனிப்பு ஆகியவையும் வைத்து டெலிவரி செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், குழம்பை ஊற்ற கொட்டாங்குச்சியில் செய்த ஒரு கரண்டியும் உள்ளே இருக்கும். இந்த ஃபேமிலி பேக்கை மூன்றிலிருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம். ஏன் கொடுவா மீன் மட்டும் என்று பலரும் கேட்டனர். இந்த மீன் வகை சுவை மிகுந்தது. அதிகம் முள் இருக்காது. மீன் சாப்பிடத் தெரியாதவர்கள் கூட இதனை எளிதாக சாப்பிட முடியும். இதனால் கொடுவா மீனுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.நிறுவனத்தைத் தொடங்கிய சில நாட்களிலேயே நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான், மீன் உணவுக்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதையும் உணர்ந்தோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் வேறு சில கடல் உணவுகளையும் சமைத்து தரும்படி கேட்கத் தொடங்கினர்.

இதனால், 2022ல் ஈக்காட்டுதாங்கலில் ஒரு எக்ஸ்பிரீயன்ஸ் மையம் அமைத்தோம். இங்குதான் எங்களுடைய கிளவுட் கிச்சனும் இருக்கிறது. அங்கு மீன் உணவுகளுடன், இறால், கனவா, நண்டு போன்ற மற்ற கடல் உணவுகளையும் சமைத்து வழங்கினோம். இதற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இங்கு உணவருந்த முடியும் என்றாலும் ஓட்டல் போன்று நாங்கள் இருக்கையை அமைக்கவில்லை. அதிகபட்சம் 16 நபர்கள் மட்டுமே சாப்பிட முடியும். நேரில் உணவருந்த வருபவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. எனவே, இன்னும் சற்றே பெரிதாக முழுமையான உணவகத்தை தொடங்கலாம் என்று நினைத்தோம். அதன்முயற்சிதான், தற்போது வேளச்சேரியில் தொடங்கியிருக்கும் இந்த மீன்சட்டி உணவகம். இதில் ஒரே சமயத்தில், 50 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும்.

இங்கு மெனுவையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். மீன் மற்றும் முட்டை கலந்த சூப், நண்டு சூப், இறால் சூப் தொடங்கி, கறிவேப்பிலை பாரா மீன் ஃப்ரை, லெமன் கார்லிக் பேரேட் ஃபிஷ் ஃப்ரை, புதினா ஃபிஷ் ஃப்ரை, லேடி ஃபிஷ் தவா ஃப்ரை, பெப்பர் ப்ரான் 65, நண்டு சீஸ் பால்ஸ், மீன் தலையைப் போட்டு மீன் குழம்பு, காரா மீனில் பத்ய மீன் குழம்பு, நெத்திலி குருமா, இறால் சோறு, கனவா வாணல் சோறு, பழைய சோறு – கருவாடு தொக்கு, மீன் சோறு. மேலும் டிபன் வகைகளில், சுறா கொத்து பரோட்டா, சுறா புட்டு தோசை, இட்லி மீன் குழம்பு காம்போ என சுமார் 99 வகையான கடல் உணவுகளை வழங்குகிறோம். இது தவிர, கடல் விருந்து என சுமார் 16 அயிட்டங்கள் கொண்ட காம்போவும் வழங்குகிறோம்.

இதில், சாதம், குழம்பு வகைகள், பொரித்த வகைகள், ரசம், நன்னாரி சர்பத் மற்றும் ஸ்பெஷல் ஸ்வீட் பீடா ஆகியவை இருக்கும். எங்கள் சிக்னேச்சர் டிஷ் என்றால், அது மாங்காய் போட்ட புளி மீன் குழம்பு, சுறா பரோட்டா, சுறாபுட்டு தோசை, பழையசோறும்-கருவாட்டுத் தொக்கும்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்றால், இந்த உணவுகள் அனைத்தும், எந்த ரசாயன கலப்பும் இல்லாமல் வீட்டில் சமைத்த உணவு போன்றுதான் இருக்கும். ஆன்லைனில் ஆர்டர் கொடுக்க நினைப்பவர்கள், முதல்நாளே இரவு 11 மணிக்குள் எங்க வெப்சைட்ல ஆர்டர் பண்ணலாம். சென்னை சுற்றுவட்டாரத்தில் 30 கி.மீ தொலைவிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்களே டெலிவரி செய்கிறோம். ஒருவேளை உடனடியாக வேண்டும் என்றால், சொமேட்டோ, ஸ்விகியிலும் ஆர்டர் பண்ணலாம். பக்காவா பேக் பண்ணி சூடா வீட்டுக்கு அனுப்பிடுவோம்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் நண்பர்கள் இருவரும்.

தேவி

You may also like

Leave a Comment

10 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi