Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம் திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

by Porselvi

திருவொற்றியூர்

பகுதி 3

திருமயிலைக்கு அடுத்தபடியாக, கடற்கரையிலமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் திருத்தலமான திருவொற்றியூர் பற்றி இங்கு காணவிருக்கிறோம். “ஓங்கு மாகடல் ஓதம் வந்து உலவும் ஒற்றி ஊர்” எனச் சுந்தரரும், “திரு ஒற்றியுறா மருவு நகர் ஒற்றியுர் வாரி திரை அருகுற்றிடும் ஆதி சிவன்” என்று அருணகிரியாரும் பாடியுள்ளனர். இறைவன்- ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், படம்பக்கநாதர், புற்றிடங்கொண்டார் எனும் பெயர்களைக் கொண்டவர்.

இறைவி-வடிவுடையம்மன், திரிபுரசுந்தரி, தலமரம் – மகிழம்,கொடிமரம், நந்தி, பலிபீடம் வணங்கி வலம் வருகிறோம். 27 நட்சத்திரங்களும் இறைவனை வழிபட்டதனால் 27 லிங்கங்கள் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. சூரியன், நால்வர், (சுந்தரர் அருகில் சங்கிலி நாச்சியார்), ஏகாம்பர நாதர், ராமநாதர் ஆகியோர் சந்நதிகள் உள்ளன. ஜெகதாம்பிகை சமேத ஜெகந்நாதர், அமிர்தகடேஸ்வரர், விநாயகர், காளி, கௌரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

சோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்கும் தியாகேசரையும், தூணில் விளங்கும் அனுமனுக்குத் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ள அழகையும் தரிசித்து வெளியே வருகிறோம். நுழைவு வாயிலில் நடராஜப் பெருமான் உள்ளார். இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உற்சவத் திருமேனி உள்ள சந்நதி உள்ளது. வள்ளலார் பாடிய வடிவுடைமணிமாலை நூலை குணாலய விநாயகரை வணங்கி துவங்கியுள்ளார்.

இவரை தரிசித்து விசாலமான மூலவர் கருவறையை நோக்கிச் செல்கிறோம். சுயம்பு லிங்கம்; புற்று மண்ணாலானவராதலால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. சதுர வடிவமான கவசம் சாத்தப்பட்டுள்ளது. இதனால் சுவாமி, படம்பக்கநாதர் எனப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமி நாளில் மட்டுமே இக்கவசம் நீக்கப்பட்டு புனுகுச் சட்டம், ஜவ்வாது, சாம்பிராணித் தைலம் சாத்தப்படுகின்றன. ஒரு ஆண்டில் இந்நாள் முதல் மூன்று நாட்கள் மட்டுமே சுவாமி கவசமில்லாமல் காட்சி தருகிறார். பின்னர், ஆண்டு முழுதும் கவசத்துடனேதான் காட்சி அளிக்கிறார். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடத்தப்படுகின்றன.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மூலட்டான அருள்ஜோதி முருகன் எனப்படுகிறார். ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு தோகை விரித்த நிலையில் நிற்கும் மயிலுடன் அழகுற காட்சி அளிக்கிறார். பாலசுப்ரமணியர் ஐந்தடி உயரத்தில் தனியே காட்சியளிக்கிறார். ஒற்றியூர் ஈஸ்வரர் விளங்கும் பிற்காலக் கோயிலும் உள்ளது. நான்கு கால வழிபாடுகள் நடக்கின்றன. ஒரு தூணில் பட்டினத்தாரும் எதிர்த் தூணில் பத்திரகிரியாரும் காட்சியளிக்கின்றனர்.

இவர் தவிர திருப்தீஸ்வரர், சந்திரசேகரர், பஞ்ச பூதத் தல லிங்கங்கள் இவற்றையும் தரிசிக்கிறோம். எனவேதானோ பட்டினத்தார், “பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஓதும் திருவொற்றியூர்” என்று பாடினாரோ? முதல் பிராகாரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள முருகன் சந்நதிக்கு வருகிறோம். அருணகிரியார் பாடியுள்ள இரண்டு திருப்புகழ்ப் பாக்களை இங்கு சமர்ப்பிக்கிறோம்.

1. சொரூபப்பிரகாச (பாடலின் பதம் பிடித்த வடிவம்)
“சொரூபப்பிரகாச! விசுவரூபப் பிரமாக! நிசசுக! விப்பிர தேச! ரசசுப மாயா
துலியப் பிரகாச! மதசொலியற்ற ரசாச வித
தொகை விக்ரம! மாதர் வயிறிடையூறு
கருவிற்பிறவாதபடி, உருவில் பிரமோத, அடி
களை எத்திடிராக வகை அதின் மீறிக்
கருணைப் பிரகாச! உனதருளுற்றிட, ஆசில் சிவ
கதி பெற்(று) இடரானவையை ஒழிவேனோ?

குருகுக்குட வார கொடி, செரு உக்கிர ஆதபயில்
பிடி கைத்தல ஆதி அரி மருகோனே!
குமரப் பிரதாப! குக! சிவசுப்பிரமாமணிய!
குணமுட்டர் அவா அசுரர் குலகாலா!
திரு ஒற்றியுறா மருவு, நகர் ஒற்றியுர் வாரி, திரை
அருகுற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா!
திகழுற்றிடு யோக தவ மிகு முக்கிய மா தவர்கள்
இதயத்திடமே மருவு பெருமாளே!’’

பிரகாச சொரூபனே! சராசரம் முழுவதையும் தன் உருவத்தில் கொண்டவனே! முழுமுதற் பொருளே! உண்மையின்பம் தருபவனே! தேஜஸ் உடையவனே! இன்ப சுபப்பொருளே! அழியாத தூய ஒளியே! சமய நூல்கள் அதிகம் இயற்றிய கலை அரசே! இன்பம் கூடி விளங்கும் பராக்ரமசாலியே! மாதர்களின் வயிற்றினிடையே ஊறுகின்ற கருவில் வந்து பிறவாதபடி, உனது திருவுருவத்தில் மிக சிரேஷ்டமான திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில் மேம்பட்டவனாய், கருணை ஒளியனே! உனது திருவருள் கூடுவதால் நான் குற்றமற்ற சிவகதியைப் பெற்று, துன்பங்கள் அனைத்தையும் கடக்க மாட்டேனோ?

உனதன்பிற்குகந்த கோழிக் கொடியையும், போரில் உக்கிரமான வெயில் ஒளி வீசும் வேலையும் பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே! திருமால் மருகனே! குமரனே! பெருமை மிக்க குகனே! அழகிய சிவசுப்பிரமணியனே! நீச குணமுடையவரும் ஆசைகள் மிக்கவருமான அசுரர் குலத்திற்கு யமனே!

திருமகள் சேர்ந்து பொருந்தியிருக்கும் நகரமான திருவொற்றியூரில் கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதி சிவன் அருளிய குழந்தையே! சிறப்புமிக்க யோகத்திலும் தவத்திலும் மேம்பட்ட தவசீலர்களின் நெஞ்சம் எனும் இடத்திலேயே பொருந்தி விளங்கும் பெருமையனே!

குற்றமற்ற சிவகதி பெற்று துன்பங்களை ஒழிவேனோ?

[திரு ஒற்றியூறா மருவு நகர் ஒற்றியூர் எனும் வரியில், ஒற்றி என்ற சொல்லை “பொருந்தியிருத்தல்” மற்றும் “ஊரின் பெயர்” என்று இரு பொருள் வருமாறு பாடியிருப்பது மிக அழகாக உள்ளது]

2. கரியமுகில் (பாடலின் பிற்பகுதி)

“அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர்
அவர்கள் புகழ் ஓத புவிமீதே
அதிக நடராஜர் பரவு குருராஜ
அமரர் குல நேச குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ் கநக மேனி உடையாளர்
திருவளரும் ஆதிபுரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் பெருமாளே!’’
[விதரணமதான வகை நகைகள் கூறி
விடுவதன் முன் ஞான அருள்தாராய்]

திருமால், பிரம்மா, தேவர்கள், முனிவர்கள், சிவயோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழை ஓத, பூமியில் சிறப்புற்று விளங்கும் நடராஜப் பெருமான் போற்றுகின்ற குருராஜ மூர்த்தியே! தேவர் குல நேசனே! குமரேசனே! பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தியவர், தேவியை ஒரு பாகத்தில் உடையவர் (பொன்னார் மேனியனாம் சிவனது குமரனே!) லட்சுமிகரம் விளங்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில் விளங்கும் வெற்றிவேலனே! தேவர் பெருமாளே!

[உலகினர் சுருக்கென்று தைக்கும்படியான வகையில் பரிகாச மொழிகளில் பேசி இகழ்வதற்கு முன்பு, ஞான அருள் தருவாயாக!]தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் தனிக் கோயிலில், அம்பிகையின் சந்நதியை தரிசிக்கிறோம். வடிவுடையம்மனின் அருள் பெற்ற வள்ளலார், அம்பிகையைத் தரிசித்த பின் தாமதமாக வீடு திரும்பினார். வழக்கமாக உணவளிக்கும் அண்ணி உறங்கிவிட்டிருந்தார். பசியுடன் வாசலில் படுத்து உறங்கிய வள்ளலாருக்கு, தேவியே அண்ணி உருவில் வந்து உணவளித்தார் என்பது வரலாறு.

சித்ரா மூர்த்தி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi