திருவனந்தபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் இருந்து கொச்சிக்கு 640 கண்டெய்னர்களுடன் சென்ற எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது . இந்தக் கப்பலில் 10க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு உள்பட ஆபத்தான அமிலப் பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலில் மூழ்கிய பல கண்டெய்னர்கள் கடந்த சில தினங்களாக கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. இதிலிருந்து வெளியேறிய பஞ்சு, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு பொருட்கள் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான பொருட்கள் கரை ஒதுங்கின. இந்நிலையில் கரை ஒதுங்கும் அமிலப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து எம்எஸ்சி எல்சா 3 கப்பல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக கேரள அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் ஆலோசனை நடத்தியுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதற்கிடையே கப்பல் மூழ்கியது குறித்து சில சந்தேகங்களும் நிலவுவதால் இது தொடர்பாக விசாரிக்கவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.
சரக்கு கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா?
கேரள மீன்பிடித் தொழிலாளர்கள் ஐக்கிய வேதி சங்க மாநில தலைவர் சார்லஸ் ஜார்ஜ் கூறியது: கொச்சி அருகே சரக்கு கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மூழ்கிய சரக்கு கப்பலுக்கு ரூ. 400 கோடி வரை மதிப்பு இருக்கலாம். இத்தகைய சரக்கு கப்பலின் காலாவதி 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தக் கப்பல் செயல்பாட்டுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது காலாவதி கடந்த பின்னரும் 3 ஆண்டுகள் இந்தக் கப்பல் இயக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒரு சரக்கு கப்பலின் காலாவதி 15 ஆண்டுகள் மட்டுமே ஆகும். மூழ்கிய இந்தக் கப்பலின் செயல்பாட்டை நிறுத்தவும், வேறொரு புதிய கப்பலை கொண்டு வரவும் இந்தக் கப்பல் நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இந்தக் கப்பல் மூழ்குவதால் நிறுவனத்திற்கு எந்த நஷ்டமும் கிடையாது. முழு இன்சூரன்ஸ் தொகையும் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும். இதனால் மூழ்கிய கப்பலை திருப்பி எடுப்பதற்கு அந்த நிறுவனம் முயற்சிக்காது. 26 டிகிரி மட்டுமே சாய்ந்த ஒரு கப்பல் 12 மணி நேரத்திற்குள் எப்படி முழுவதுமாக மூழ்கியது என்பதில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.