சென்னை: சமூக வலைதளங்களில் பிரபலமாக ஆசைப்பட்டு, கடலில் நீச்சலடிப்பதை ரீல்ஸ் எடுத்த வாலிபர் பாறாங்கல்லில் மோதி பரிதாபமாக பலியானார். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பிரதீப் (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர், கல்லூரியில் மேற்படிப்பை தொடர தயாராகி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 4 பேருடன் எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரைக்கு சென்று விளையாடி உள்ளார்.
பின்னர், உற்சாக மிகுதியில் கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, பிரதீப் கடலில் நீந்துவது போல் ரீல்ஸ் பதிவு செய்ய வீடியோ எடுக்குமாறு நணபர்களிடம் கூறிவிட்டு அலையில் நீந்தியுள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய பிரதீப், தூண்டில் வளைவுக்காக போடப்பட்டிருந்த பாறையில் மோதி படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பிரதீப்பை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், பிரதீபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தில் ராடசத அலையில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.