ஊட்டி: தென்மேற்கு பருவமழை காரணமாக ஊட்டி அருகே உள்ள பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. ஊட்டி-கூடலூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையில் உள்ள நீரை கொண்டு சிங்காரா மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அணையில் சுற்றுலாத்துறை சார்பில் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தண்ணீரை கிழித்து கொண்டு செல்ல கூடிய ஸ்பீட் படகுகளில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த மாதம் மற்றும் நடப்பு மாதத்தில் அவ்வப்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பைக்காரா அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளலவான 100 அடியை எட்டியது. தொடர்ந்து, மழை பெய்த நிலையில் அண்மையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கடல்போல் காட்சியளிக்கிறது. தற்போது, கடந்த சில நாட்களாக மழையின்றி இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் பைக்காரா பகுதியில் மழையின்றி ரம்மியமான சூழல் நிலவியது. இதனால், சுற்றுலா பயணிகள் பைக்காராவிற்கு படையெடுத்தனர். அங்குள்ள படகு இல்லத்தில் மோட்டார் படகுகளில் சவாரி செய்து இதமான காலநிலை மற்றும் இயற்கையை பார்த்து ரசித்தனர். படகு இல்லத்திற்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்லும் ஸ்பீட் போட்டில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.