நாகை: கடலில் மாயமாகும் மீனவர்களை உயிருடன் மீட்க அதிநவீன ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ட்ரோன் உற்பத்தி நிறுவனமான யாளி ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தினர், நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தனர். கலெக்டர் ஆகாஷை நேரில் சந்தித்த அவர்கள், தாங்கள் வடிமைப்பு செய்துள்ள ‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள கடற்கரை எல்லையை கண்காணிக்க முடியும். நாகை மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் படகுடன் மாயமாவது வழக்கமாக உள்ளது. மாயமாகும் மீனவர்களை ட்ரோன் மூலம் கண்டறிந்து மீட்க முடியும்.
இதற்காக அதி நவீன ‘ட்ரோன்’ கண்காணிப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளோம். கடலில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அதி நவீன ட்ரோன் மூலம் கண்காணித்து மீனவர்களை விரைவில் மீட்க முடியும். அது மட்டுமல்லாமல் கடல் வழிப்போக்குவரத்து கண்காணிப்பு, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள், 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வசதிகள் இந்த ட்ரோனில் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினர். பின்னர் செயல் விளக்கமாகவும் அவர்கள் செய்து காட்டினர். இதைத்தொடர்ந்து யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம், கலெக்டருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு சமூக சேவையாக இந்த ட்ரோன் சேவை செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.