சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்ற மூக்கையா (54), முத்து முனியாண்டி (57), மலைச்சாமி (59) மற்றும் ராமச்சந்திரன் (74) ஆகிய 4 பேரும் கடந்த 1ம் தேதி அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், கடலில் மூழ்கியதில் மலைச்சாமி (59) பலியானார்.
மேலும், மீன்பிடி விசைப்படகு மூழ்கியதில் காணாமல் போன ராமச்சந்திரன் (74) என்பவரை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் கடந்த 5 நாட்காளாக தேடியும் உடல் கிடைக்கவில்லை. எனவே, மாயமான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைபோல் தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் கிராமத்தில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை சீரமைப்புப்பணியின்போது மண் சரிந்து உயிரிழந்த ஜெயநாராயணமூர்த்தி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.