திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ளது தடுத்தாட்கொண்டூர் கிராமம். இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் 3ம் தேதி சனிக்கிழமையன்று கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் கால விஷ்ணு சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இதுபற்றி ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:
தடுத்தாட்கொண்டூர் கிராமம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஊராகும். முதிய அந்தணராக வந்த சிவபெருமான் சுந்தரரை ஆட்கொண்டருளிய புராணத்துடன் தொடர்புடையது. இங்கு, ஏரிக்கரை அருகே அமைந்துள்ள சன்னியாசியப்பன் கோயில் வளாகத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கோயில் எழுப்பும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இங்குள்ள வீரப்பன் மேடு எனும் பகுதியில் சுமார் 5 அடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். பின்னிரு கரங்கள் பிரயோக சக்கரம், சங்கு ஆகியவற்றை ஏந்தியுள்ளன.
முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பில் வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. அழகான ஆடை அலங்காரத்துடனும் அணிகலன்களுடனும் காணப்படும் விஷ்ணு தாமரை மலரால் அமைந்துள்ள பீடத்தின் மீது நின்று புன்னகையுடன் அருள்பாலிக்கிறார். இந்தச் சிற்பம் பிற்கால பல்லவர் காலம் (கி.பி.9ஆம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். இதனை சென்னையைச் சேர்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிபடுத்தி உள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் விஷ்ணு கோயில் இருந்து மறைந்திருக்க வேண்டும். கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் சப்த மாதர் சிற்பங்கள் அமைத்துள்ளன. இவை கி.பி. 13-14ஆம் நூற்றாண்டு ஆகலாம். மேலும், இங்கிருக்கும் வேட்டை ஐயனார் கோயிலில் இருக்கும் சிற்பத்தை ஆய்வுசெய்தோம்.
இடையில் குறுவாள், கச்சையுடன் காணப்படும் ஆணின் உருவம் ஒரு கையில் அம்பினையும் மற்றொரு கையில் ஆயுதத்தையும் ஏந்தியுள்ளன. உருவத்தின் கால்களுக்கு கீழே நாய் காட்டப்பட்டுள்ளது. சண்டைக்குப் போவது போன்று வடிக்கப்பட்டுள்ள இந்த வீரன் ஊரின் நலனுக்காக அல்லது மாடுகளை மீட்கும் (ஆநிரை மீட்பு) போரில் ஈடுபட்டு உயிர் விட்டிருக்கலாம். அந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது.
இந்நினைவுக்கல் கி.பி.14-15ம் நூற்றாண்டில் (விஜயநகரர் காலத்தில்) எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம மக்களால் வேட்டை ஐயனார் என வழிபடப்பட்டு வருகிறார்கள். தடுத்தாட்கொண்டூர் கிராமம் பல்லவர் காலம் முதல் விஜய நகர் காலம் வரை வரலாற்றுச் சிறப்புடன் விளங்கியதை இந்தச்சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி.காமராஜ், டி.கே.முரளி, கே.துரைசாமி உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.