சாரணியம் (Scouting) என்பது உலகளவில் இளைஞர்களின் உடல், உள, ஆன்மிக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். இளைஞர்கள் சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும், வெளிவட்டாரச் செயல்பாடுகளில் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சாரணியம் வழிவகுக்கின்றது. இது 20ஆம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் குருளையர், சாரணர், திரி சாரணர் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கென சாரணியம் 1910ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பெரிய இளைஞர் அமைப்புகளில் இதுவும் ஒன்று.
குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கம் சாரணர் இயக்கம். ராணுவக் கட்டுக்கோப்பு இளைய தலைமுறையிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், ராணுவ வீரர் பேடன் பவுல் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். குருளையர், சாரணர், திரிசாரணர், நீலப்பறவையினர், சாரணியர், திரிசாரணியர் என மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு பயிற்சியளிப்பவர் ஸ்கவுட் மாஸ்டர் எனவும், மாணவிகளுக்குப் பயிற்சியளிப்பவர் கைடு கேப்டன் என்றும் அழைக்கப்படுவர். தற்போது உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ளனர்.
தமிழகப் பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு என்பதால் பன்னாட்டுப் பெருந்திரளணி ஒன்றை நடத்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் முன்னணியில் இருப்பது சாரணர் இயக்கம். சிறந்த குடிமக்களை உருவாக்கித் தருவது சாரண இயக்கத்தின் முதன்மையான நோக்கம். அதனால்தான் மகாத்மா காந்தி ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு சாரணர் இருக்க வேண்டும் என்று விரும்பினார். தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும், என்கிற நற்பண்பினை இந்த இயக்கம் கற்றுத் தருகிறது.
தயாராய் இரு என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். சிறுவர்களிடையே புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் இந்த இயக்கம் முக்கிய பங்காற்றுகிறது. சாரணர்களை அணி அணியாகப் பிரித்து அணித் தலைவர்கள் வழியாக உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது இந்த இயக்கத்தின் சிறப்பு அம்சமாகும். சாரண இயக்கத்தில் ஒரு சிறுவன் சேரும்போது அவரிடம் உறுதிமொழி பெறப்படுகிறது. ‘‘நாட்டிற்கு என் கடமையை செய்யவும், பிறருக்கு உதவி செய்யவும், சாரணச் சட்டத்தை பின்பற்றி நடக்கவும் என்னால் இயன்றவரை முயல்வேன் என என் மனமே சான்றாக உறுதி கூறுகிறேன்” இந்த உறுதிமொழியை ஒவ்வொரு சாரணரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது போல் சாரணர்களுக்கென்று சட்டம் உள்ளது. இந்த சட்டம் ஒன்பது அம்சங்களை உள்ளடக்கியது.
1. சாரணன் நம்பிக்கைக்கு உரியவன்.
2. மாறாப் பற்று உடையவன்.
3. எல்லோருக்கும் நண்பன் ஏனைய சாரணனுக்குச் சகோதரன்.
4. மரியாதை உடையவன்.
5. விலங்குகளின் நண்பன் இயற்கையை நேசிப்பவன்.
6. கட்டுப்பாடு உடையவன், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் துணையானவன்.
7. தைரியமுடையவன்.
8. சிக்கனம் உடையவன்.
9. மனம், மொழி, மெய்களில் தூய்மையானவன்.
இந்தச் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் ஒவ்வொரு சாரணரும் வெவ்வேறு திறமைகளைக் கற்றுக் கொள்கின்றனர். வீடுகளில் தங்கள் கடமைகளைச் செய்தல், முதல் உதவி, கயிறுகளில் முடிச்சுகள் கட்டுகள் போடுவதற்குக் கற்றுக் கொள்ளுதல், வனக்கலைக் குறியீடுகளை அறிந்து கொள்ளுதல், சாலை பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுதல், இயற்கையை உற்று நோக்கி அறிதல். தீ மற்றும் தீ தடுப்பு நடவடிக்கைகளை அறிதல்.
சமைக்கக் கற்றுக் கொள்ளுதல், திசை காட்டும் கருவியை பயன்படுத்த அறிதல், நிலப்படக்கலை அறிதல், தூரங்கள், உயரங்களை மதிப்பிட அறிந்துகொள்ளுதல், சமூகச்சேவை முகாம்களில் பங்கேற்றல், மது ஒழிப்பு, சிறு சேமிப்பின் அவசியம் போன்றவை குறித்த விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல். கணினியைப் பயன்படுத்த அறிதல், கைப்பேசிகளின் நன்மை தீமைகளை அறிதல், இணையதள பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ளுதல். இப்படி பல்வேறு திறன்களை கற்றுக்கொண்டு அதற்கேற்ற திறமைக்கான சின்னங்களைப் பெற்று சிறப்பாகச் செயல்படும் சாரணர்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.