சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று சதமடித்தது வெயில். தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்பட்டி அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதியில் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.