நாகர்கோவில்: நாகர்கோவில் பூங்காவில் நடந்து வரும் கோளரங்க கட்டுமான பணி விரைவில் முடிவடைய உள்ளது. தற்போது கோளரங்கத்தில் அறிவியல் உபகரணங்கள் அமைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். காலை, மாலை வேளைகளில் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிக்கிறார்கள். இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மேலும் நூலகமும் செயல்படுகிறது. இந்த பூங்காவை அறிவியல் மையமாக மாற்றும் வகையில், பூங்காவில் கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின.
இங்கு அமைக்கப்படும் நவீன டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ திரையுடன் அமைகிறது. 4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதை பார்ப்பதற்காக 40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அவ்வப்போது மாநகராட்சி மேயர் மகேஷ், இந்த கோளரங்க கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட உள்ள அறிவியல் உபகரணங்கள் அனைத்தும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரி கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல உபகரணங்கள் கொண்டு வந்து அமைக்கப்பட்டுள்ளன.
அறிவியல் அரங்கமாக மாற உள்ளதால், பூங்காவில் மேலும் பல சீரமைப்பு பணிகளை மாநகராட்சி செய்ய உள்ளது. குறிப்பாக இந்திய அரசின் சின்னத்துடன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணை புதுப்பிக்க உள்ளனர். மேலும் பூங்காவில் உடைந்த நிலையில் உள்ள பொருட்கள், இருக்கைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ளார். அழகிய செடிகள் நடவும், மர பலகையால் ஆன காட்சி டவர் புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே பூங்காவில் ஒரு பகுதி, வாகன பார்க்கிங் பகுதியாக உள்ளது.
கார்களுக்கு ரூ.40 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். நாகர்கோவில் நகரில் உள்ள வர்த்தக பகுதிக்கு, வருபவர்கள் இங்கு கார்களை பார்க்கிங் செய்து விட்டு செல்கிறார்கள். எனவே பூங்காவுக்கு வருபவர்கள் தவிர மற்றவர்கள் பார்க்கிங் செய்ய தடை விதிக்க வேண்டும். வாகன பார்க்கிங் பகுதியில், பூங்காவுக்கு வருபவர்களுக்கு தேவையான சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.