ஊட்டி: ஊட்டி அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். பின்னர் மாற்றுப்பணியாக (டெபுடேஷன்) கோத்தகிரியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றினார். கடந்த 10 நாட்களுக்கு முன் மீண்டும் ஊட்டி அருகேயுள்ள பள்ளியிலேயே பணியமர்த்தப்பட்டார். இவர் அந்தப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் கற்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில் போலீஸ் அக்கா திட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று பாலியல் கல்வி குறித்தும், போக்சோ சட்டம், குட் டச், பேட் டச் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளிக்க வேண்டிய எண்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். விழிப்புணர்வு நிகழ்வு முடிந்தவுடன் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 21 மாணவிகள் ஆசிரியர் செந்தில்குமார் மீது புகார் தெரிவித்தனர். அதில் உடலின் பல இடங்களிலும் தொட்டு பேசுவது, மாணவிகளின் அருகில் நெருக்கமாக அமர்வது என பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் ஊட்டி ஊரக போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ஆசிரியர் செந்தில்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து ஊரக காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட எஸ்பி நிஷா அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின் ஆசிரியர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சம்பந்தப்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) நந்தகுமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.