திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தின் பங்களிப்புடன் கடந்த 2015ம் ஆண்டு வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த துறைமுகத்தை அமைப்பதற்கு மீனவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. இதனால் பலமுறை பணிகள் தடைப்பட்டன. இந்நிலையில் இந்த துறைமுகத்திற்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன.இதைத் தொடர்ந்து நேற்று சீனாவில் இருந்து ஷென்ஹுவா என்ற முதல் சரக்கு கப்பல் வந்தது. இந்தக் கப்பலுக்கு நேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் வி. முரளிதரன், கேரள அமைச்சர்கள் மற்றும் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அடுத்த 6 மாதங்களுக்குள் இந்தத் துறைமுகம் முழு அளவில் செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.