திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு மற்றும் திருத்தணி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அறிவியல் கருவி பெட்டிகளை வழங்கும் விழா திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் துணை ஆய்வாளர் ரவி மற்றும் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் யோகனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் 58 பள்ளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான 108 அறிவியல் கருவி பெட்டிகளை ஆசிரியர்களிடம் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, “இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் வளர்ச்சியானது அபரிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியில் பள்ளி மாணவர்களின் பங்கு மிக அவசியமானது. வகுப்பில் செயல்முறை விளக்கங்களுடன் கற்று கொடுக்கும் போது உயிரோட்டமாக இருக்கும். மேலும் கற்றல் கற்பித்தல் முறைகள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் இயல்பை உருவாக்குகிறது. மாணவர்களுக்கு வகுப்பறை தாண்டிய அறிவியல் சார்ந்த சிந்தனைகளை கற்றுக் கொடுக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களுடைய அறிவுத்திறனில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய எழுத்தறிவு திட்டத்தின் தேசிய மேலாளர் ரங்கராஜன் இந்திய எழுத்தறிவு திட்டத்தின் பணிகள் பற்றியும் அறிவியல் சார்ந்த கற்றல் திறன் மேம்பாட்டுக்கான அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் அறிவியல் உபகரண பெட்டிகளை சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய எழுத்தறிவு திட்டத்தின் பயிற்சியாளர்கள் ராஜீவ் காந்தி, ரமேஷ் அறிவியல் கருவி பெட்டிகளை பயன்படுத்தும் முறை குறித்த செயல் முறை விளக்கம் மற்றும் பயிற்சியினை ஆசிரியர்களுக்கு வழங்கினர். இதில் ஐஆர்சிடிஎஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் விஜயன், கள ஒருங்கிணைபாளர்கள் பழனி ஆல்பன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.