* வேளாண் உற்பத்தி பொருட்களில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம்
* வேளாண்மை ஆராய்ச்சி கழக மண்டல இயக்குநர் ஆலோசனை
நாகப்பட்டினம் : நாகை டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 14வது நிறுவன நாளையொட்டி மீன்வள பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாய பெருவிழா மற்றும் கருத்தரங்கம், கண்காட்சி நேற்று நடந்தது.விரிவாக்க கல்வி இயக்குநர் பத்மாவதி வரவேற்றார். மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தலைமை வகித்து பேசினார்.
கண்காட்சியை துவக்கி வைத்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக மண்டல இயக்குநர் ஷேக்மீரா பேசியதாவது: உணவு உற்பத்திக்கான வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் கவனம் செலுத்தி வருகிறது.
வேளாண்மைக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு முக்கிய இடத்தில் உள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு உட்பட்டு கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மேற்கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அலைபேசி செயலியை மீன்வள பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும். வரும் 10 ஆண்டு காலத்துக்கு மீன்வளத்தில் தொலைநோக்கு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் தீவன உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு 50 சதவீத நிதி அளிக்கப்படுகிறது என்றார். இதைதொடர்ந்து விவசாயிகளுக்கு அலங்கார மீன் குஞ்சுகள், கூட்டு மீன் குஞ்சுகள், பாக்கு மீன் குஞ்சுகள், கோழி குஞ்சுகள், ஆட்டு குட்டிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கருத்தரங்கில் காலநிலைக்கேற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சலுக்கான நவீன சாகுபடி தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பில் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், மீன் வளர்ப்பு தொழில்நுட்பம், வேளாண் சார்ந்த உற்பத்தி பொருட்களில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன் நன்றி கூறினார்.