திருப்போரூர்: திருப்போரூர் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2வயது பெண் குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமம் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரியன் (35). ஆலத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, ஜானகி (30) என்ற மனைவியும், ஜோயல் (4) என்ற மகனும், ஷைலா (2) என்ற மகளும் உள்ளனர். அண்மையில், தண்டலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஜோயலை யூகேஜி வகுப்பில் சேர்த்தார்.
தினமும் பள்ளி வேனில் சென்று மாலையில் அதே வேனில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மாலை ஜோயல் உள்ளிட்ட பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு பள்ளியில் இருந்து வேன் புறப்பட்டது. வேனில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். வேனை தண்டலம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (40) என்பவர் ஓட்டி சென்றார். ஜோயலை இறக்குவதற்காக அவரது வீட்டின் அருகே வேன் நின்றது. அப்போது, எதிர் திசையில் இருந்த ஜோயலின் தாயார் ஜானகி சாலையைக் கடந்து வந்து தனது மகன் ஜோயலை அழைத்துச்செல்ல வந்தார்.
அவரது பின்னாலேயே 2 வயது பெண் குழந்தையான ஷைலாவும் வந்துள்ளார். இதை ஜானகி கவனிக்கவில்லை. தனது மகன் ஜோயலை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஜானகி வேகமாக வேனின் பின்பக்கமாக வீட்டிற்கு சென்றார். தாய் வேகமாக சென்று விட்டதால் அவருக்கு பின்னால் சென்ற குழந்தை ஷைலா திரும்பி வேனுக்கு முன்பக்கமாக வீட்டிற்கு செல்ல தொடங்கினார். இதை கவனிக்காக ஓட்டுனர் வேனை இயக்கியதால் குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதை நேருக்கு நேராக பார்த்த குழந்தையின் தாய் ஜானகி கூச்சல்போட்டு அலறி அழுதார். அருகில் இருந்தவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்தனர். தொடர்ந்து மாற்று வாகனம் எடுத்து வரப்பட்டு விபத்துக்குள்ளான வேனில் இருந்த மற்ற குழந்தைகள் மாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் போலீசார், குழந்தையின் சடலலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேனை பறிமுதல் செய்து ஓட்டுநர் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.