சென்னை: பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உயர்நிலைக் குழு பரிந்துரைத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி பாரத் என்ற வார்த்தையை மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணி உருவாக்கிய பிறகு நாட்டின் பெயரை பாரத் என பயன்படுத்த பாஜக தொடங்கியது.
ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைத்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உயர்நிலைக் குழு பரிந்துரைத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாரத் என அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66% உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. மாற்ற திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். தற்போது பள்ளி பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பது அதிகார வரம்பு மீறல். அதிகார வரம்பு மீறல் மட்டுமல்லாது, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும். எனவே பரிந்துரையை ஏற்க கூடாது என்று வைகோ கடுமையாக சாடியுள்ளார்.