சென்னை: திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: சென்னையில் லேடி வெலிங்டன் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கின்ற பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 3 மாத தாமதம் என்று இருந்த நிலையில், இந்த ஆண்டில் சுமார் ரூ.1141 கோடி மதிப்பில் 13 வகையான விலையில்லா பொருட்கள் பள்ளிகள் திறக்கும் போதே வழங்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார். அதன்பேரில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இனி வரும் காலத்தில் தொடக்க நாளிலேயே இனி வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டில் 16 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு விரைவில் அந்த விவரங்கள் வெளியிடப்படும். பள்ளிக் கல்வித்துறை என்று வரும் போது, பள்ளிகள் திறக்கும் போது 100 சதவீதம் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு விடும் என்பது உறுதி. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட நலிந்த பிரிவு குழந்தைகளுக்கான ரூ.600 கோடி நிதி வரவேண்டியுள்ளது. மாணவர்கள் இடையே ஒழுக்கம் வர வேண்டும் என்ற வகையில் ஒரு வாரத்துக்கு பள்ளிகளில் நீதி நெறி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வகுப்புகள் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதால், கடந்த 2 ஆண்டில் சில சம்பவங்கள் நடந்த நிலையில் ஒழுக்கக் கேடான சம்பவங்கள் குறைந்து வருகிறது.