பெரம்பூர்: தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட திரு.வி.க நகர் காவல் நிலையம் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், என உறுதிமொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து காவலர்கள் அனைவரும் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் , போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாங்கள் யாரும் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என பள்ளி மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.