சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏற்றத் தாழ்வின்றி ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் விலையில்லா 4 செட் சீருடைகள் வழங்கும் திட்டத்தையும் அதிமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தன.
இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் குறித்த நேரத்தில் நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காமலும், வெளிச் சந்தையில் தரமற்ற நூல்களை விலைக்கு வாங்கியதாலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா 4 செட் சீருடைக்கு பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். மேலும் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும், இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.