திருப்பதி : பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு இயக்கம் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என எஸ்பி பரமேஸ்வர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருப்பதி மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட ரேணிகுண்டா காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுகளின் ஒரு பகுதியாக எஸ்பி பரமேஸ்வர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதில் காவல் நிலைய எஸ்.எச்.ஓ. மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து, பொது நாட்குறிப்பு, வழக்கு டைரி, நீதிமன்ற காலண்டர் போன்ற பல்வேறு பதிவுகளை சரிபார்த்து ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் அவர் தெரிவித்தாவது:தரேணிகுண்டா நகரம் பொந்தலம்மா கோயில் சந்திப்பு மற்றும் ரமணா விலாஸ் சந்திப்பு ஆகிய இடங்களில் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும். வாகனங்களில் திடீர் சோதனை நடத்துவது, செம்மரம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடர் ரோந்து சென்று குற்றங்களை தடுக்க வேண்டும்.
ரேணிகுண்டா காவல் நிலைய பகுதியில் வசிக்கும் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து காவல் நிலைய பகுதியில் குற்றச்செயல்களைத் தடுக்க பீட் அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும். காவல் நிலையத்திற்கு வரும் புகார் தாரர்களின் மனுக்களை பெற்று, சிறு பிரச்னை ஏற்படும் போது, இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்னையை தீர்த்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார்தாரர்களிடம் மனிதாபிமான முறையில் கண்ணியமாக நடக்கவேண்டும்.இன்றைய சமுதாயத்தில் வீட்டுக்காவலில் ஈடுபடுதல், ஈவ் டீசிங், குட்டச் பேட் டச், போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகளிலும் பாதுகாக்க முடியும்.
பள்ளிகளில் மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடக்க முயன்றால் தங்கள் எஸ்.எச்.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர், ரேணிகுண்டா சப்-டிவிஷன் போலீஸ் அதிகாரி அலுவலகத்தில் ஆய்வு செய்து, பல்வேறு காரணங்களால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் மற்றும் எஸ்சி/எஸ்டி வழக்குகளில் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு கண்டு உரிய நீதியை உறுதி செய்யுமாறு டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.
மேலும் ‘ரேணிகுண்டா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் நிறைவான வாழ்வை பெறுவர்கள்’ என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ரேணிகுண்டா டிஎஸ்பி பவ்யா கிஷோர், சிஐக்கள் சந்திரசேகர், டிசிஆர்பி, சுப்பா, ரேணிகுண்டா, எஸ்ஐக்கள், ஒய்எஸ்டிபிஓ அலுவலகம் மற்றும் ரேணிகுண்டா காவல் நிலைய ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.