திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் சதுரங்க பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கையை கலெக்டர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார். இதல், பங்குபெற்ற ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் புதிதாக சேர்க்கைக்கு வந்துள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் மு.பிரதாப் வரவேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 பள்ளிகளில் 34 மாணவர்கள் சேர்க்கை முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 809 பேரும், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 457 பேரும் என மொத்தம் 1,266க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் 6 மாதத்திற்கு குழந்தைகளுக்கு பாடங்கள், வீட்டுப்பாடங்கள் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு செயல்திறன் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு வருவதை சந்தோஷமாக வருவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தர வேண்டும்.
நமது மாவட்டத்தில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்திட வேண்டும். அதுவும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்திட வேண்டும் என பேசினார். பின்னர், 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பள்ளி) பவானி, பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.