செய்யாறு: செய்யாறு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 14வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கொடநகர் நல்லதண்ணீர் குளத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(23), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக, மாணவியை கேலி, கிண்டல் செய்து வந்தாராம்.
அதேபோல் கடந்த 30ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை, விஜயகுமார் வழிமறித்து ‘உன்னிடம் பேசவேண்டும்’ எனக்கூறி ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதானால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்றிரவு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.