சென்னை: பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிக்க ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்துக்காக உயர்த்தவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015- 2016 ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 – 2019 ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பிளஸ்1 வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2013 – 2014 ம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும். 2018ம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படும்.