சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹாங்காங் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். 2022-23ம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 பேர் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2023-24ல் அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மாநில அளவிலான மன்ற போட்டிகள் மார்ச் மாதம் நடந்தது. தற்போது முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் நேற்று ஹாங்காங் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.