நாங்குநேரி: நாங்குநேரியில் இரவில் வீடு புகுந்து அண்ணன், தங்கையை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 3 மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி – அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (17) என்ற மகனும், சந்தானசெல்வி (15) என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர். தாத்தா கிருஷ்ணனின் பராமரிப்பில் இருந்து வந்த சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2, சந்தானசெல்வி 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாததால் தாத்தா கண்டித்து பள்ளிக்கு அனுப்பினார். கடந்த 9ம்தேதி பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் வகுப்பு ஆசிரியர் விசாரித்த போது, சக மாணவர்கள் சிலர் அவதூறாக பேசுவதால் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் அந்த மாணவர்களை கண்டித்ததுடன், ‘இதுபோன்று நடந்தால் பள்ளியை விட்டு நீக்கப்படுவீர்கள்’ என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் 9ம் தேதி இரவு சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைத் தடுத்த தங்கை சந்தானலட்சுமிக்கும் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடி வரவே அவர்கள் தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பேரன், பேத்தி அரிவாளால் வெட்டப்பட்டதை பார்த்த தாத்தா கிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணன், தங்கையை வெட்டிய 3 மாணவர்களை நேற்று முன்தினம் கைது செய்து பாளை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் மேலும் 3 பேரை நேற்று கைது செய்து பாளையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதுவரை 6 மாணவர்கள் கைதாகியுள்ள நிலையில் தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
* மாணவர்களின் மனதில் சமூக நல்லுறவை விதைப்போம்… முதல்வர் டிவிட்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.