திருப்பூர்: திருப்பூரில் பள்ளி வளாகத்தில் பெண் சடலம் நிர்வாண நிலையில் கிடந்தது. இவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்குவதற்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தகர செட் பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால், நேற்று மாலை ஆசிரியர்கள், அப்பகுதியினர் அந்த தகர செட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்தது.
இத்தகவலறிந்த நல்லூர் போலீசார் சம்பவ இடம் வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிந்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.