தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் ரோகித் (13). அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2ம் தேதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மாலை கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அஞ்செட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் அஞ்செட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அஞ்செட்டி போலீசார் நடத்திய விசாரணையில் 2ம் தேதி மாலை அதே பகுதியைச் சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன்(22) என்பவருடன் சிறுவன் காரில் சென்றது தெரிய வந்தது. இந்நிலையில், அஞ்செட்டி வனப்பகுதியில் உடலில் ரத்த காயங்களுடன் சிறுவன் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாதேவன் (22), கர்நாடக மாநிலம் உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் மகன் மாதேவன்(21) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதில், புட்டண்ணனின் மகன் மாதேவன், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணுடன் 2ம் தேதி தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார்.
அதனை சிறுவன் ரோகித் பார்த்து விட்டான். அதனை மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என பயந்துபோன மாதேவன், தனது நண்பரான மற்றொரு மாதேவனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்த 2 பேரும் சேர்ந்து ரோஹித்தை நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், காரில் கடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றி கை -கால்களை பிடித்துக் கொண்டு, வாயை பொத்தி அவனை மயக்கமடைய வைத்துள்ளனர்.
தொடர்ந்து திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசி கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தின்போது, மாதேவன் காதலிப்பதாக கூறப்படும் கல்லூரி மாணவியும் காரில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரி மாணவி மற்றும் மாதேவன், மற்றொரு மாதேவன் ஆகிய 3 பேரை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.